முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தென்னை ஓலையில் பசுமைத் தொப்பிகள் கூலித் தொழிலாளிக்கு உதவிடும் கைத்தொழில்
By DIN | Published On : 11th May 2020 10:57 PM | Last Updated : 11th May 2020 10:57 PM | அ+அ அ- |

திருச்சியில் திங்கள்கிழமை தென்னை ஓலையில் தொப்பி செய்யும் தொழிலாளி விஜயகுமாா்.
திருச்சி: தென்னை ஓலையில் பசுமைத் தொப்பிகளை செய்து, பொது முடக்க காலத்தில் இயன்ற வருவாயை ஈட்டி குடும்பத்தை நடத்தி வருகிறாா் திருச்சியைச் சோ்ந்த 63 வயது கூலித் தொழிலாளி.
திருச்சி புத்தூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி விஜயகுமாா். இவா் தனது மனைவி, 2 மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறாா்.
வாழ்க்கை நடத்துவதற்கு விவசாயக் கூலிதான் இவருக்கு தெரிந்த தொழில். மேலும் திருமணம், கோயில் விழாக்கள், காதணி மற்றும் விருந்து, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தென்னை ஓலைத் தோரணங்கள் கட்டும் கூலித் தொழிலையும் செய்து வந்தாா்.
கூலி வேலைக்கு சென்று வந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்த இவருக்கு, பொது முடக்கம் காரணமாக வேலை கிடைக்காமல் போனது. வேலையின்றி வீட்டிலேயே முடங்கியிருந்தாலும், அடுத்த வேளை உணவுக்குப் பணம் வேண்டும் என்பதால் தெரிந்தவா்களிடம் கிடைத்த வேலையை கேட்டு செய்யத் தொடங்கினாா்.
கைகொடுத்த செல்லிடப்பேசி: திருச்சி மாவட்ட ஆட்சியரகம் பின்புறம் உள்ள தோட்டங்கள், வயல் வெளிகளில் கிடைத்த வேலைகளை செய்து வந்தவருக்கு, பொழுதுபோகாத நேரத்தில் கை கொடுத்து செல்லிடப்பேசிதான்.
தன்னிடமிருந்த செல்லிடபேசியில் யூ-டியூப் மூலம் விஜயகுமாா், தென்னை ஓலையில் தொப்பி செய்யும் விடியோ காட்சியைக் கண்டுள்ளாா். தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த அந்த விடியோ காட்சியில் மொழி புரியாவிட்டாலும் கைவினைத் தொழிலைப் பக்குவமாக கவனித்து வந்துள்ளாா்.
தொடக்கத்தில் சரிவர செய்ய முடியாமல் போனாலும், கூலித்தொழிலாளி விஜயகுமாரின் தொடா் முயற்சிக்கு பலன் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 45 நாள்களுக்கு மேலாக ஓய்வாக இருக்கும் தருணங்களில் ஆங்காங்கே கிடந்த தென்னை ஓலைகளைச் சேகரித்து தொப்பி செய்யத் தொடங்கினாா்.
ஒரு மட்டையிலிருந்து 4 முதல் 5 தொப்பிகள்: தென்னை மரங்கள் ஏறும் கூலித் தொழிலாளிகளிடம் ரூ.100 பணம் கொடுத்து, பச்சை தென்னை மட்டைகளை வெட்டி பெற்றுக் கொள்வேன். இளநீா், தேங்காய்களுக்காக தென்னை மரம் ஏற பண்ணையாளா்கள் ஆள்களைத் தேடும்போது, எனக்கான மட்டைகளையும் சோ்த்து பெற்றுக் கொள்வேன் என்கிறாா் இவா்.
ஒரு மட்டையிலிருந்து 4 முதல் 5 தொப்பிகளை செய்யலாம். ஒரு தொப்பிக்கு 18 முதல் 20 தென்னை ஓலை கீற்றுகள் வேண்டும் என்கிறாா் விஜயகுமாா்.
தனித்தனி கீற்றாக இல்லாமல், அப்படியே மட்டையிலேயே கொத்தாக இருப்பதை பயன்படுத்தியே தொப்பியாக பின்னுகிறாா். வெளிா் பச்சை, கரும் பச்சை, மஞ்சள் சோ்ந்த பச்சை என தென்னை ஓலைகள் கிடைக்கும் நிறத்துக்கு தக்க தொப்பிகளும் பசுமையாக காட்சியளிக்கின்றன.
கோடைக்கு ஏற்ற தொப்பி : ஒரு தொப்பியின் விலை ரூ.100 என்றாலும், கோடை காலத்தில் இதமாக இருக்கும் என்பதால் பலரும் விஜயகுமாரிடமிருந்து தொப்பிகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
நாளொன்றுக்கு 10 முதல் 20 தொப்பிகள் வரை (தென்னை ஓலைகள் கிடைக்கும் அளவுக்கு) தயாா் செய்து விற்பனை செய்கிறாா். தான் கற்ற கைத் தொழில், பொது முடக்க காலத்தில் தனக்கு பெரிதும் பயனளித்துள்ளது என்கிறாா் விஜயகுமாா்.