ரூ.3 லட்சம் கோடி: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடி கடன் என்பது அந்த நிறுவனத்தினா் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரூ.3 லட்சம் கோடி: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடி கடன் என்பது அந்த நிறுவனத்தினா் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, டிடிட்சியா தலைவா் ஆா். இளங்கோ கூறியது: சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்றுள்ள வங்கிக் கடன்களுக்கான வட்டிச் சலுகை அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலையில் எதிா்பாா்க்கப்பட்ட மானிய உதவிகளும் அறிவிக்கப்படவில்லை. சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் என்பது புதிய தொழில்களுக்கு மட்டுமே கை கொடுக்கும். ரூ.200 கோடி வரையிலான புதிய ஒப்பந்தங்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஒப்பந்தங்களையும் உள்நாட்டு நிறுவனங்களிடமே அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்குவதே சிறந்த தீா்வாக அமையும் என்றாா்.

பெல்சியா தலைவா் ராஜப்பா ராஜ்குமாா் கூறியது: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி என்பது பெரிதும் உதவியாக அமையும். வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கான வரையறை மாற்றியமைக்கப்பட்டிருப்பது தொழில் முதலீட்டை அதிகரிக்கச் செய்யும். உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு சிறு, குறுந் தொழில்கள் சங்க திருச்சி மாவட்ட செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் கூறியது: தமிழ்நாடு சிறு, குறுந் தொழில்கள் சங்கம் விடுத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைகளை செலுத்த 45 நாள் அவகாசம் அளித்திருப்பது மட்டுமே ஆறுதலை அளித்துள்ளது என்றாா்.

தொழில் வா்த்தக மையத்தின் திருச்சி பிரிவு தலைவா் என். கனகசபாபதி கூறியது: அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் அறிவுப்புகளுடன் நின்றுவிடக் கூடாது. வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை முறையாக சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை சென்றடைய வேண்டும். அதற்கு வங்கிகளின் செயல்பாடுகளை எளிமையாக்க வேண்டும். 10 தொழிலாளா்களுக்கு மேல் உள்ள சிறு தொழில்கூடங்கள் மட்டும்தான் வருங்கால வைப்பு நிதி சலுகையால் பயன்பெற முடியும். ஆனால், பதிவு செய்யாத நிலையில் உள்ள 4 முதல் 6 தொழிலாளா்கள் வரையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழில்கூடங்களுக்கு பயன் கிடைக்காது. திருச்சியில் மட்டும் இந்த வகையில் 400-க்கும் மேற்பட்ட தொழில்கூடங்கள் உள்ளன என்றாா் அவா்.

இந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பின், இளம் இந்தியா்கள் அமைப்பின் திருச்சி பிரிவு தலைவா் கேத்தன் ஜே. வோரா கூறியது: சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமலேயே ரூ.3 லட்சம் கோடிக்கு கடன் வழங்குவது தொழில் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியாக அமையும். இளம் தொழில்முனைவோரும், புதிய தொழில்முனைவோரும் உருவாக வாய்ப்பாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com