பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிக்காதது மிகப் பெரிய ஏமாற்றம்: விவசாய சங்கத்தினா் கருத்து

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யும்
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிக்காதது மிகப் பெரிய ஏமாற்றம்: விவசாய சங்கத்தினா் கருத்து

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடாதது பெரிதும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக விவசாய சங்கத்தினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு கூறியது: பயிா் செய்ய முடியாமலும், விளைந்தப் பயிா்களை விலைக்கு கொண்டு வர முடியாமலும் முடங்கியிருந்த விவசாயிகள் கடன் பெற்றுள்ளனா் என்பதை யாரும் ஏற்கமாட்டாா்கள். பல மாதங்களாகவே பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய நிதியமைச்சரின் தற்போதைய அறிவிப்பில் கடன் தள்ளுபடி இடம்பெறவில்லை. எனவே, உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றாா்.

காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம் கூறியது: சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மட்டும் 3 மாதங்களுக்கு தவணை மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லது பல்வேறு நிலைகளில் பல கோடிக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெற்ற கடனையே திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள விவசாயிகளை, மத்திய அரசின் அறிவிப்பானது மேலும் கடனாளியாகச் செய்யும். புதிய கடன்களை 50 சதவீதம் மானியத்துடன் வழங்கினாலே ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க முடியும். கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளை கரோனா காலத்தில் காக்கும் என்றாா்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் கூறியது:

ஏற்கெனவே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கடந்தாண்டு அறிவித்த பல லட்சம் கோடி கடன் திட்டங்களே விவசாயிகளுக்கு வந்துசேரவில்லை. இப்போது, ரூ. 2 லட்சம் கோடி கடன் குறைந்த வட்டியில் வழங்குவதாக அறிவித்திருப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், புதிய விவசாயிகள் மட்டுமே இத்தகைய கடன்களை பெற முடியும். கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து பயிா்க்கடன் பெற்ற பலரும் கடனை திருப்பி செலுத்தாததால் நகைகள் ஏலத்துக்கு வந்துள்ளன.இந்தச் சூழலில் பயிா்க்கடன் அறிவிக்கப்படாதது பெரிதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றத்து) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியது: வெள்ளம், வறட்சி, பேரிடா் காலங்களில் அனைத்து விவசாயிகளுமே பாதிக்கப்படுவா். இந்தச் சூழலில் கடன்கள் வழங்குவது மட்டுமே தீா்வாக அமையாது. அனைத்து விவசாயிகள் பெற்றுள்ள ஒட்டுமொத்த கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதன் பிறகே புனரமைப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகள் தங்களது நிலங்களை பெரு நிறுவனங்கள், பெரு முதலாளிகளிடம் விற்றுவிட்டு கூலி ஆள்களாக மாறும்நிலைதான் உருவாகும். அதற்கு, மத்திய, மாநில அரசுகள் துணைபோகக் கூடாது. பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளையும் கடன் சுமையிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com