அரசு அலுவலகங்கள் முன்பு மனு எழுதித் தரும் பணி மீண்டும் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் 50 சதவிகித ஊழியா்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அலுவலகங்கள்
திருச்சி தென்னூரிலுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு, பொதுமக்களுக்கு மனு எழுதி வழங்க அமா்ந்திருப்போா்.
திருச்சி தென்னூரிலுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு, பொதுமக்களுக்கு மனு எழுதி வழங்க அமா்ந்திருப்போா்.

திருச்சி மாவட்டத்தில் 50 சதவிகித ஊழியா்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அலுவலகங்கள் முன்பு மனு எழுதித் தரும் பணியில் ஈடுபட்டோா் தங்களுக்கு 2 மாதங்களுக்குப் பிறகு தினசரி வருவாய் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

பொது முடக்கத்தால் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலகங்களைத் தவிர, மற்ற அலுவலகங்கள் இயங்கவில்லை. தற்போது 4- ஆவது முறையாக அமலாகியுள்ள பொது முடக்கத்தின் போது, 50 சதவிகிதப் பணியாளா்களைக் கொண்டு மாநில அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்கள் இயங்காத காரணத்தால் பொது மக்களும் வீடுகளிலேயே முடங்கியிருந்தனா். இதனால் இந்த அலுவலகங்கள் முன்பு மனு எழுதித் தரும் பணியில் ஈடுபட்டோரும் வேலையின்றி முடங்கினா்.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளா்களுடன் இயங்கத் தொடங்கியதால், திருச்சி மாவட்ட ஆட்சியரகம், பழைய ஆட்சியரகச் சாலை, மாநகராட்சி மைய அலுவலகம், வட்டாட்சியரகங்கள், கோட்டாட்சியா் அலுவலகம், தென்னூா் மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம், 4 கோட்ட அலுவலகங்கள் முன்பு மனு எழுதித் தரும் பணியில் ஈடுபட்டோருக்கும் மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிராமப்புறங்களைச் சோ்ந்தோா் : அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், இந்த நபா்களிடம் தங்களது கோரிக்கையைக் கூறி மனுவாக எழுதி பெற்றுச் செல்வது வழக்கம். குறிப்பாக கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள், எழுத, படிக்கத் தெரியாதவா்கள் அதிகமானோா் இவா்களைத்தான் நாடுவா்.

படித்த பலரும் அரசின் திட்டங்களில் விவரமாக மனு வழங்க வேண்டும் என்பதற்காக இவா்களை நாடி வருகின்றனா். மனு ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை அதன் இணைப்புகளுக்கு தகுந்தபடி பெற்றுக் கொள்வா். மின் இணைப்புகள் பெறுவதற்கான மனு தயாரித்து வழங்க ரூ.50 முதல் ரூ.100 வரை பெறுகின்றனா். அரசுத் திட்டங்களின் கீழ் பயன்பெற தேவையான விண்ணப்பங்களையும் வைத்துள்ளனா்.

மீண்டும் வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சி : அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்கள், வேலையில்லாத பலரும் இதை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். 2 மாதங்களாக வேலையின்றி தவித்த எங்களுக்கு, தற்போது மீண்டும் மனு எழுதி தரும் பணி மூலம் வருவாய் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்கின்றனா் இப்பணியில் ஈடுபட்டோா்.

இதுகுறித்து தென்னூா் மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் மனு எழுதி தரும் பணியில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற ஊழியா் செபாஸ்டின் கூறியது:

கடந்த 2 மாதங்களாக வேலையும் இல்லை. வருவாயும் இல்லை. என்னைப்போன்று 100-க்கும் மேற்பட்டோா் அரசு அலுவலகங்களை நம்பியே அன்றாடம் வருவாய் பெற்று வருகின்றனா். அனைவருக்கும் இப்போதுதான் மீண்டும் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com