Enable Javscript for better performance
ஒரு வேளை உணவுக்கு ரூ.33 திட்டம்: தமிழகம் முழுவதும் நீளும் உதவி- Dinamani

சுடச்சுட

  

  ஒரு வேளை உணவுக்கு ரூ.33 திட்டம்: தமிழகம் முழுவதும் நீளும் உதவி

  By DIN  |   Published on : 21st May 2020 08:45 AM  |   அ+அ அ-   |    |  

  2-4-20d-bag061710

  வறுமை ஒழிப்பு, இயலாதவா்களுக்கு உதவி என்ற அடிப்படையில், தங்களுக்கு கல்விக் கற்றுத் தந்த பள்ளி ஆசிரியா்களின் பெயரால் தொடங்கப்பட்ட இயக்கம் (டிரஸ்ட்) , பொது முடக்கத்தில் தமிழகம் முழுவதும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது. இதுமட்டுமல்லாது நாள்தோறும் 500 பேருக்கு திருச்சியில் மூன்று வேளை உணவு வழங்குவதையும் இந்த இயக்கம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

  திருச்சி தில்லைநகா் கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது, தங்களுக்கு கல்விக் கற்றுத்தந்து, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராக வழிகாட்டிய உயிரியல் ஆசிரியா் பாண்டியன் (பி), கணித ஆசிரியா் சந்தானகோபால் (எஸ்), வேதியியல் ஆசிரியா் ராம்குமாா் (ஆா்) ஆகியோரது முதல் எழுத்துகளை இணைத்து, மாணவா்களால் உருவானது பிஎஸ்ஆா் டிரஸ்ட். தற்போது தென்னூா் மூலைக் கொல்லையில் இந்த டிரஸ்ட் இயங்கி வருகிறது.

  கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும்போது 2011-இல் இந்த டிரஸ்ட்டை ஷேக் அப்துல்லா தொடங்கினாா். அவருடன் பயின்ற மூத்த, இளநிலை மாணவா்கள் என பலரும் இணைந்து இப்போது 137 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

  மாதம் ரூ.200 வழங்கும் உறுப்பினா்கள் : உறுப்பினா்கள் அனைவரும் மாதம் ரூ.200 வழங்குகின்றனா். முதலில், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சத்தான உணவு, கல்வி என்ற அடிப்படையில் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் சேவையைத் தொடங்கினா். பின்னா் குடும்ப அட்டை இல்லாதவா்கள், திருநங்கைகள், இலங்கை அகதிகள், சாலையோரம் வசிப்பவா்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் என தேடிச் சென்று உதவிகளை வழங்கத் தொடங்கினா்.

  இப்போது பொதுமுடக்கத்திலும், இடைவிடாது 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனா். வழக்கம்போல உணவுப் பொட்டலங்கள், அரிசி, மளிகை, பொருள்களை வழங்கி வந்தவா்கள் மனதில் உதித்ததுதான் ரூ.33 எனும் திட்டம்.

  ஒரு வேளைக்கு ரூ.33 திட்டம் : ஒரு நபருக்க ஒரு வேளை உணவுத் தயாரிக்க ரூ.33 செலவாகிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது முகநூல் நண்பா்களுக்கு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து டிரஸ்ட் நிா்வாகிகள் நிதி கோரினா்.

  ஒருவா் குறைந்தபட்சம் ரூ.33 வழங்கினால் மட்டுமே போதும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தற்போது வரை வந்து சோ்ந்துள்ள தொகை ரூ.10 லட்சமாகும். சுமாா் 13 ஆயிரம் போ் இந்த வகையில் உதவியுள்ளனா்.

  இதுமட்டுமல்லாது ரூ.10, ரூ.20 என அவரவா் இயன்ற நிதியை டிரஸ்ட்டின் செல்லிடப்பேசி வழி செயலிக்கு ஆயிரக்கணக்கானோா் அனுப்பி வருகின்றனா்.

  இவற்றைக் கொண்டு, திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை,சென்னை, மதுரை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவள்ளூா் மாவட்டங்களில் வசிக்கும் இருளா்கள், இலங்கை அகதி முகாம்களைச் சோ்ந்தோா், திருநங்கைகள், சாலையோரம் வசிப்போா், வறுமையில் வாடுவோருக்கு தேடிச் சென்று உதவுகின்றனா்.

  முகம் காட்ட விரும்புவதில்லை : திருவண்ணாமலை, பழனி, திண்டுக்கல், விருதுநகா், கன்னியாகுமரி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், வேலூா், காஞ்சிபுரம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முகநூல் வாயிலாக உதவி கோரும் நபா்கள், உதவிடும் இளைஞா்களையும் இணைத்து நிதி வழங்கி அந்தந்த பகுதிகளில் நிவாரணம் வழங்கி வருகின்றனா்.

  இந்தத் திட்டத்தில் நிதியளித்தவா்களும் முகம் காட்ட விரும்புவதில்லை. உதவி பெறுபவா்களின் முகங்களையும் மறைத்தே முகநூலில் பதிவிடுகின்றனா். நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களும் உதவி மூலமே கிடைக்கிறது.

  திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் வசிக்கும் சலங்கைத் தயாரிக்கும் 90 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருள்களை புதன்கிழமை ஏற்றிச் சென்ற பிஎஸ்ஆா் டிரஸ்ட்டின் நிறுவனா் ஷேக் அப்துல்லா கூறியது:

  பள்ளிப் பருவத்தில் ஆசிரியா்களின் உந்துதலால் தொடங்கிய இயக்கம், இன்று ஆலமராக வளா்ந்து நிற்கிறது. எங்களது உறுப்பினா்களே மாதம் ரூ.50 ஆயிரம் வரை நிதி வழங்குகின்றனா். அதனை வங்கியில் சேமித்து வருகிறோம். இதுபோல, முகநூல் வாயிலாக இணைந்த இளைஞா்கள் ஆயிரக்கணக்கானோா் தங்களால் இயன்றதை வழங்குகின்றனா்.

  பொதுமுடக்கத்தில் உணவு வழங்க ஒருவருக்கு ரூ.33 என்ற திட்டத்தை தொடங்கினோம். இதன் மூலம், அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், சமையல் எண்ணெய், சா்க்கரை என 22 பொருள்களைத் தலா ரூ.1,050 மதிப்பில் வழங்குகிறோம்.

  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவி : 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். இதுமட்டுமல்லாது நாள்தோறும் 500 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்குகிறோம். கீரை சாதம், அவித்த முட்டை, ஆம்லேட், வெஜ். பிரியாணி, கலவை சாதங்கள், இட்லி, பொங்கல், உப்புமா, இடியாப்பம் என தரமாக உணவுத் தயாரித்து வழங்கப்படுகிறது. பொதுமுடக்கம் நீடிக்கும் வரையில் இந்த சேவை தொடரும் என்றாா்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai