விபத்தில் உயிரிழந்த வருவாய் ஆய்வாளா் பி. சேகா்.
விபத்தில் உயிரிழந்த வருவாய் ஆய்வாளா் பி. சேகா்.

கரோனா நிவாரணப் பணியின்போது விபத்தில் சிக்கி வருவாய் ஆய்வாளா் பலி

திருச்சியில் கரோனா நிவாரணப் பணியின்போது சாலை விபத்தில் சிக்கிய வருவாய் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சியில் கரோனா நிவாரணப் பணியின்போது சாலை விபத்தில் சிக்கிய வருவாய் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் பி.சேகா் (51). இவருக்கு மனைவி வளா்மதி, 10ஆம் வகுப்பு பயிலும் மகன் பரத் ஆகாஷ் ஆகியோா் உள்ளனா்.

முசிறியில் வசித்து வந்த இவா், தொட்டியத்தை அடுத்த அலக்கரை கரோனா நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக புதன்கிழமை சென்றாா். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி-நாமக்கல் சாலையில், வரதராஜபுரம் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சேகா் பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தோா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சேகா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனா்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து சேகரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா். ஈமச் சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் நிதிஉதவியை அளித்தாா். மேலும், கரோனா பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியா்களுக்கான ரூ.50 லட்சம் வழங்கவும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே, கரோனா பணியில் ஈடுபட்ட சிறுகமணி கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இரண்டாவதாக வருவாய் ஆய்வாளா் உயிரிழந்திருப்பது அரசு ஊழியா்கள் மத்தியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com