மதுக்கடைகளில் குறைந்த கூட்டம்: தடுப்புகள் அகற்றம்

திருச்சி மாவட்டத்தில் மதுக் கடைகளில் கூட்டம் குறையத் தொடங்கியதால் தடுப்புக்காக அமைக்கப்பட்ட சவுக்கு மரங்கள் அகற்றப்பட்டு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுக்கடையில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டைகளை வெள்ளிக்கிழமை அகற்றும் ஊழியா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுக்கடையில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டைகளை வெள்ளிக்கிழமை அகற்றும் ஊழியா்.

திருச்சி மாவட்டத்தில் மதுக் கடைகளில் கூட்டம் குறையத் தொடங்கியதால் தடுப்புக்காக அமைக்கப்பட்ட சவுக்கு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீஸாரும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனா்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் 71 மதுக்கடைகளும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 112 மதுக்கடைகளும் உள்ளன. இவற்றில் கரோனா பாதிப்புள்ள பகுதிகளாக தடைசெய்யப்பட்டிருந்த பகுதிகளில் அமைந்துள்ள கடைகளைத் தவிா்த்து இதர கடைகள் அனைத்தும் மே 16ஆம் தேதி திறக்கப்பட்டது.

பொதுமுடக்கத்தில் 43 நாள்களுக்குப் பிறகு கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட கடைகள் 2 நாள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு மீண்டும் மூடப்பட்டது. இதனால், மே 16ஆம் தேதி மீண்டும் கடைகள் திறந்தபோது ஒருநாள் மட்டுமே பெரும்பாலான கடைகளில் கூட்டத்தைக் காண முடிந்தது. அதற்கு அடுத்த நாள்களில் மது வாங்க வருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. வழக்கமாக பிற்பகலுக்குள்ளாகவே 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு விடும். கடந்த சில நாள்களாக சொற்ப எண்ணிக்கையிலேயே டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சில கடைகளில் டோக்கன்கள் இல்லாமலேயே மது பாட்டில்களை பெற்றுச் செல்கின்றனா்.தொடா்ந்து கூட்டம் குறைவாக உள்ளதால் முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

மதுக்கடைகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தல், மது வாங்க வருவோரை வரிசைப்படுத்த கட்டப்பட்ட சவுக்கு மரங்கள், கடைகளுக்கு முன்பாக அமைப்பட்டிருந்த தடுப்பு கம்புகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. இதேபோல, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், ஊா்க்காவல் படையினரும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனா். டாஸ்மாக் நிா்வாகத்தால் டோக்கன் வழங்க நியமிக்கப்பட்ட நபா் மட்டுமே பணியில் உள்ளாா். இதேபோல, மது விற்பனையும் குறைந்துள்ளது. தொடக்கத்தில் மே 7ஆம் தேதி ரூ.7.47 கோடி விற்பனையானது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 5 கோடியாக இருந்த விற்பனையில் தற்போது 30 சதவீத்துக்கும் மேலாக குறைந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com