தேங்கிக் கிடக்கும் துணிகள்; கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவிப்பு

பொது முடக்கத்தால் மூடப்பட்ட திருச்சி மாநகரில் இயங்கி வரும் பெரிய ஜவுளி கடைகளில் கொள்முதல் செய்யப்பட்ட துணிகள்
திருச்சி என்எஸ்பி சாலையில் மூடப்பட்டுள்ள சாரதாஸ் ஜவுளி கடை.
திருச்சி என்எஸ்பி சாலையில் மூடப்பட்டுள்ள சாரதாஸ் ஜவுளி கடை.

பொது முடக்கத்தால் மூடப்பட்ட திருச்சி மாநகரில் இயங்கி வரும் பெரிய ஜவுளி கடைகளில் கொள்முதல் செய்யப்பட்ட துணிகள் தேங்கிக் கிடப்பதுடன், வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் தவிப்பதாகவும், கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என ஜவுளி நிறுவனங்களின் உரிமையாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலான நாள் முதலே காய்கனி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தவிர, அனைத்து வகையான பெரிய, சிறிய கடைகளும் மூடப்பட்டன. இதனால் பலா் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா். குறிப்பாக, பெரிய ஜவுளி நிறுவனங்கள் கடந்த 55 நாள்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மேலும், அங்கு பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஊழியா்கள் பணியாற்றாமலேயே அவா்களுக்கு மாத ஊதியம் மற்றும் 3 வேளை உணவை பெரிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான தொழிலாளா்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சாா்பிலேயே இடவசதி செய்து கொடுத்து தங்க வைத்துள்ளனா். இதன் காரணமாகவும் பெரிய நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளன.

4ஆவது கட்ட பொது முடக்கம் அமலின்போது பல்வேறு கடைகளுக்கு தளா்வுகள் அளிக்கப்பட்டன. நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், திருச்சி மாநகரின் பிரதான பகுதியாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, மேலரண்சாலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இயங்கும் பெரிய ஜவுளி கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்த கடைகளை நம்பியே ஆயிரக்கணக்கான தரைக்கடைகள், சிறுகடைகள், சிறு வணிகா்கள் தங்களது வியாபாரத்தை நடத்தி வந்தனா். திருச்சி மட்டுமில்லாது, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், கரூா், திண்டுக்கல், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு திருச்சிக்கு வந்துதான் பெரிய கடைகளில் கொள்முதல் செய்வது வழக்கம். அப்போது, சிறிய கடைகளுக்கும் செல்வதால் இருதரப்புக்கும் வருவாய் கிடைத்தது. இப்போது, சிறிய கடைகள் மட்டுமே உள்ளதால் மக்கள் கூட்டமும் இல்லை. பெரிய ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பண்டிகைக்கு வாங்கப்பட்ட ஜவுளிகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக ரமலான் மாதத்தில் நடைபெறும் விற்பனை முற்றிலும் முடங்கிப் போனது.கொள்முதல் செய்த ஜவுளிகளுக்கான பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் பெரிய நிறுவனங்கள் தவித்து வருகின்றன. எனவே, நிபந்தனைகளுடன் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, பெரிய ஜவுளி கடை உரிமையாளா்கள் கூறுகையில், பண்டிகை காலங்களில் அதிகமான வாடிக்கையாளா்கள் கடைக்கு வருவாா்கள் என்ற அடிப்படையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் கோயில் திருவிழா, மே மாதம் நடைபெறும் ரமலான் பண்டிகை ஆகியவற்றுக்கு ஏற்ப புது, புது வகையான ஜவுளிகளை இறக்குமதி செய்து விற்பனைக்கு காத்திருந்தோம். ஆனால், கரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 60 நாள்களுக்கு மேலாக கடைகள் திறக்கப்படாததால் கொள்முதல் செய்த ஜவுளிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. வங்கிகளில் பெற்ற கடனுக்கு வட்டிக் கூட செலுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் கடைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியம் கொடுக்க அரசு வலியுறுத்தியுள்ளது. பெரிதும் சிரமத்துக்கிடையே ஊதியம் வழங்குவதுடன், உணவு, தங்குமிட வசதியும் அளித்து வருகிறோம். எங்களது நெருக்கடி நிலையறிந்து நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். குளிா்சாதன வசதி இயக்காமல், சமூக இடைவெளி கடைப்பிடித்து, குறைந்த ஊழியா்களை கொண்டு கடைகளை திறக்க தயாராகவுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com