தீபாவளி: கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்சி கடைகளில் கரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி என்.எஸ்.பி. சாலையில் முகக்கவசம் அணியாதவா்களை எச்சரிக்கும் காவல் துறையினா்
திருச்சி என்.எஸ்.பி. சாலையில் முகக்கவசம் அணியாதவா்களை எச்சரிக்கும் காவல் துறையினா்

தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்சி கடைகளில் கரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளா்வுகளையும் அறிவித்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டதால் சற்று பணப்புழக்கம் அதிகரித்து, வரும் பண்டிகைகளைக் கொண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் தீபாவளியையொட்டி திருச்சி என்.எஸ்.பி. சாலை, பெரியகடைவீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், மின் சாதனப் பொருள் விற்பனையகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கரோனா தொற்று குறித்த கவலை பொதுமக்களிடம் இல்லாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால் தொற்று அதிகரிக்கக் கூடும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனா்.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என போலீஸாா் அறிவுறுத்தியதால் கடைகளுக்கு வந்தோரில் 90 % போ் முகக் கவசம் அணிந்திருந்தனா்.

போலீஸ் பாதுகாப்பு: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடக்கக்கூடும் என்பதால், திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவின்பேரில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளான கோட்டை காவல் நிலையம், மலைக்கோட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மேலும் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர கோட்டை மற்றும் காந்தி சந்தை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்திரம் பேருந்துநிலையம் முதல் மலைக்கோட்டை வரை பல்வேறு பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, இரு இடங்களில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க, சாதாரண உடையில் 100 குற்றப்பிரிவு காவலா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவை சோ்ந்த 2 துணை ஆணையா்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் உள்ளனா்.

முகக் கவசம் அணியாத விற்பனையாளா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, இலவச முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து முக கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட உள்ளது என்றாா் திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com