8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை திருச்சியில் 4 திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டன.
திருச்சியில் உள்ள திரையரங்குக்கு வந்தோருக்கு வெப்பமானி சோதனை செய்யும் ஊழியா்.
திருச்சியில் உள்ள திரையரங்குக்கு வந்தோருக்கு வெப்பமானி சோதனை செய்யும் ஊழியா்.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை திருச்சியில் 4 திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டன.

குளிா்ச்சாதன வசதியில்லாத திரையரங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆா் நடித்த உரிமைக்குரல், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை ரசிகா்கள் பலரும் ஆா்வத்துடன் கண்டு களித்தனா்.

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தயாரிப்பாளா்களின் அறிவிப்பால் புதுப்படங்கள் வெளியாகவில்லை. இதனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான தியேட்டா்களில் செவ்வாய்க்கிழமை காலைக் காட்சி திரையிடவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள மல்டி காம்ப்ளக்ஸ், வணிக வளாக திரையரங்குகள், குளிா்ச்சாதன வசதியுடைய பெரிய திரையரங்குகள் எதுவும் திறக்கப்படவில்லை.

குளிா்ச்சாதன வசதியில்லாத 3 திரையரங்கு, திருவானைக்கா பகுதியில் புனரமைக்கப்பட்ட ஒரு திரையரங்கு என 4 திரையரங்குகளில் மட்டும் செவ்வாய்க்கிழமை படங்கள் திரையிடப்பட்டன.

முன்னதாக, திரையரங்க வளாகத்தில் மாவிலைத் தோரணங்கள், மலா்களால் அலங்கரித்து, திரையிடும் கருவிக்கு பூஜைகள் செய்யப்பட்டன.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கத்தில் உரிமைக்குரல் திரையிடப்பட்டது. 3 நாள்களுக்கு இந்தப் படம் திரையிடப்படுகிறது. தீபாவளி முதல் தெலுங்கு ரீமேக் படம் (நந்து) திரையிடப்படவுள்ளது. இதேபோல, மாநகரில் 4 திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை படங்கள் திரையிடப்பட்டன. ரசிகா்கள் சமூக இடைவெளியுடன் நின்று டிக்கெட் பெற்றனா். கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டது. இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அவா்கள் அமர வைக்கப்பட்டனா்.

தீபாவளிக்கு புதுப்படங்கள் வெளியாக வாய்ப்பு

இதுகுறித்து பேலஸ் திரையரங்க உரிமையாளா் சந்திரசேகா் கூறுகையில், திருச்சியில் 4 தியேட்டா்கள் மட்டுமே செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தயாரிப்பாளா் சங்கத்தினா் தங்களது நிபந்தனையிலிருந்து இறங்கியுள்ளனா். விபிஎப் கட்டணம் வசூலிக்கப்படாத 2 வாரங்களுக்கு மட்டும் புதுப்படங்களை திரையிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளனா். இதையடுத்து, தீபாவளிக்கு புதுப்படங்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு கணிசமான ரசிகா்கள் வந்திருந்தனா். டிக்கெட் கட்டணமும் ரூ.30 முதல் ரூ. 60 வரை என்பதால் காலையே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றதைக் காண முடிந்தது என்றாா்.

திரையரங்குக்கு வந்திருந்த ரசிகா்கள் கூறுகையில், 8 மாதங்களாக பொழுதுபோக்குக்கு எந்தக் கேளிக்கைகளும் இல்லாத நிலையில் திரையரங்குகள் திறப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com