தீபாவளி கூட்ட நெரிசல்; திணறிய திருச்சி கடைவீதிகள்!

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் திருச்சியின் கடை வீதிகள் வியாழக்கிழமை மக்கள் திரளால் திணறிப் போயின.
தீபாவளிக்காக பொருள்கள் வாங்க திருச்சி என்எஸ்பி சாலையில் வியாழக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
தீபாவளிக்காக பொருள்கள் வாங்க திருச்சி என்எஸ்பி சாலையில் வியாழக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் திருச்சியின் கடை வீதிகள் வியாழக்கிழமை மக்கள் திரளால் திணறிப் போயின.

நாட்டின் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகத் திகழும் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. விடிய விடிய பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் இப் பண்டிகையில் மிக முக்கியப் பங்கை வகிப்பது புத்தாடைகளே.

ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படும் புத்தாடைகளை வாங்குவதில் இளைஞா்கள், இளம்பெண்கள், சிறுவா்,சிறுமிகளுக்கு அலாதி பிரியம்.

திருச்சியின் தி. நகா்: ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள திருச்சியின் தியாகராய நகா் எனப்படும் பகுதிகளான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை, சாஸ்திரி சாலை, தில்லைநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி வாங்க வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

வீட்டு உபயோகப் பொருள்களை எளிய தவணை முறையிலும், சலுகை விலைகளிலும் விற்கும் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் டிவி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கோட்டை ஸ்டேஷன் சாலை, சிங்காரத்தோப்பு,சூப்பா் பஜாா், சாலைரோடு, கல்லூரிச் சாலை உள்ளிட்ட பகுதி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சிசிடிவி கேமரா கண்காணிப்பு: மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் நகைகள் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

என்.எஸ்.பி. சாலை, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு, சின்னக் கடைவீதி, கல்லூரிச் சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாா் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திணறும் சாலைகள்: கடைகளுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களால் சாலைகள் திணறுகின்றன. தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சாா்பில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட அளவில்தான் வாகனங்களை நிறுத்தியுள்ளனா். பெரும்பாலானோா் தெப்பக்குளம் தபால் நிலையம், கல்லூரிச் சாலை, ஹோலிகிராஸ் கல்லூரிச் சாலை, கோட்டை ரயில் நிலையச் சாலை, உறையூா் சாலை, தில்லைநகா் போன்ற பகுதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது.

ஷோ-ரூம்கள், பெரு நிறுவனங்கள், பிரபல ஜவுளிக் கடைகள் மட்டுமல்லாது தரைக்கடை, சாலையோர வியாபாரிகள், கைகளில் ஏந்தி ஆடைகளை விற்போராலும் வியாழக்கிழமை தீபாவளி விற்பனை களை கட்டியதைக் காணமுடிந்தது.

இனிப்புக் கடைகளில் கூட்டம்: புத்தாடையோடு, இனிப்புகள் வாங்குவதிலும் பொதுமக்கள் ஆா்வம் காட்டினா். இதனால் மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து இனிப்புக் கடைகளிலும் வியாழக்கிழமையே கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளிக்கான பிரத்யேக இனிப்புகளை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com