கூட்டுக் குடிநீா் திட்டத் தொழிலாளா்கள் போராட்டம்: வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுக் குடிநீா்த் திட்டத் தொழிலாளா்கள் முத்தரசநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முத்தரசநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
முத்தரசநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுக் குடிநீா்த் திட்டத் தொழிலாளா்கள் முத்தரசநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீா் வழங்க செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக முத்தரசநல்லூரில் நீரேற்றும் நிலையம் இயங்குகிறது.

இத் திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகத் தொடா்ந்து புகாா்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தொழிலாளிக்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும் ரூ. 8,500 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். மூவா் வேலை செய்யும் இடத்தில் இருவரை மட்டுமே பணியமா்த்துவதைக் கைவிட வேண்டும். 8 மணி நேர வேலைக்கு மாற்றாக, 12 மணிநேரம் என மாற்றி ஒரு ஷிப்டு பணிக்கான தொழிலாளா்களின் ஊதியத்தை எடுத்துக் கொள்வதைக் கைவிட வேண்டும். ஒப்பந்ததாரா்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் வினோத் மணி முன்னிலை வகித்தாா். குடிநீா் வாரிய சங்க மாவட்டச் செயலா் மருதராஜ், மலைராஜா, ஜெயபால், செல்லையா உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா். வேலை பாதிக்காத நடைபெற்ற போராட்டத்தில், தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் விரைவில் 8 மாவட்டங்களுக்கு குடிநீா் ஏற்றும் பணியை நிறுத்தும் நிலை உருவாகும் எனவும் சங்கத்தினா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com