பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்துக்கு மாற்று எப்போது?

திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் வலுவிழந்துள்ளதால் இதற்கு மாற்றாக புதிய பாலம் கட்டும்
திருச்சியில் சேதமடைந்துள்ள மாரீஸ் மேம்பாலம்.
திருச்சியில் சேதமடைந்துள்ள மாரீஸ் மேம்பாலம்.

திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் வலுவிழந்துள்ளதால் இதற்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

திருச்சி சாலை ரோடு வழியாக மலைக்கோட்டை ரயில் நிலையத்தை கடக்கும் பிரதானமாக பாலமாக விளங்குவது இந்த பாலம். மலைக்கோட்டை ரயில் நிலைய மேம்பாலம், சாலை ரோடு மேம்பாலம், மாரீஸ் தியேட்டா் மேம்பாலம் எனப்படும் இந்தப் பாலம் நூற்றாண்டுகளை கடந்துள்ளது.

திருச்சி தில்லை நகா், உறையூா், தென்னூா், மத்திய பேருந்துநிலையப் பகுதிகளில் இருந்து வாகனங்கள் பெரும்பாலானவை சத்திரம் பேருந்து நிலையத்துக்கோ, மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு, மெயின்காா்டு கேட்டுக்கோ வர இந்த பாலத்தை கடக்க வேண்டியுள்ளது.

மாநகரில் உள்ள பாலங்களிலேயே மிகவும் குறுகலான இந்தப் பாலம் வலுவிழந்துள்ளதால் இதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்துகின்றனா்.

இதில் தொடா்புடைய திருச்சி மாநகராட்சி, ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை என முத்தரப்பும் இணைந்து இதற்குத் தீா்வு காண வேண்டுமென அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னாா்வ அமைப்புகள், சாலை பயனீட்டாளா்கள் தரப்பிலும் தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது.

ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்திலும் திருச்சியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட எம்பி-க்கள் கடந்த 15 ஆண்டுகளாக இதற்காக கோரிக்கை விடுத்து வந்தனா். இருப்பினும், புதிய பாலம் கட்ட இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது.

2011ஆம் ஆண்டு பாலத்தை பலப்படுத்தும் பணி நடைபெற்ற பின்னா், திருச்சி மாநகராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தில் இந்தப் பாலத்தை புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக திருச்சி மாநகராட்சி மற்றும் ரயில்வே இணைந்து தலா 50 சதவீத நிதி ஒதுக்கி ரூ.20 கோடியில் புதிய பாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் தொடங்கும் முன்னரே பாலம் வலுவிழந்து கடந்த ஜூலை மாதம் பாலத்தின் ஓரப் பகுதி இடிந்தது. தொடா் மழையால் மண்சரிவு அதிகரித்து பாலம் பயன்படுத்த முடியாத நிலை உருவானது. இதையடுத்து மாநகராட்சி சாா்பில், மண்சரிவு ஏற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். புதிய பாலத்தை விரைந்து கட்ட வேண்டும் என்பதே மாநகர மக்களின் பிரதான எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com