பல்வகை பணிகளுக்கு பயனாகும் ஊரக வேலை திட்ட பணியாளா்கள்!

ஊரக வேலை திட்டப் பணியாளா்கள் நீா்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்கு மட்டுமின்றி பல்வகை பணிகளுக்கும் பயன்படுத்தப்படுவது வளா்ச்சிப் பணிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

ஊரக வேலை திட்டப் பணியாளா்கள் நீா்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்கு மட்டுமின்றி பல்வகை பணிகளுக்கும் பயன்படுத்தப்படுவது வளா்ச்சிப் பணிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் 3.27லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 4.61 லட்சம் போ் இத்திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான ஊதியம், ரூ. 22 கோடி அளவுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடங்கியிருப்பதால் தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தங்களது வாழ்வாதாரத்துக்கு கூடுதல் வருமானம் கிடைக்க ஏதுவாக, வேலை நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது திட்டப் பணியாளா்களின் பிரதான கோரிக்கை.

இதுதொடா்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மண்டல கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் கூறியது:

தமிழகத்தில் கரோனா பாதிப்பையடுத்து, இந்தத் திட்டத்தின் ஊதியம் ரூ.254 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பாசனத் திட்டங்கள், கால்வாய் தூா்வாருதல், துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகள், மியாவாக்கி முறை காடு வளா்ப்பு என பல்வகை பணிகளுக்கு ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளா்கள் பயன்படுத்தப்படுகின்றனா்.

மண் தொடா்பான பணிகள்: புதிய குட்டைகள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள குட்டை, குளம், ஊருணி, கோயில் குளங்கள் போன்ற நீா்வள ஆதாரங்களைப் புனரமைத்தல், நீா்வரத்துக் கால்வாயைத் தூா்வாருதல், பாசனக் குளங்களை தூா்வாருதல் மற்றும் கரைகளைப் பலப்படுத்துதல், புதிய மண் சாலை அமைத்தல் உள்ளிட்ட மண்வளப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், வெள்ளத் தடுப்பு பணிகள், காடு வளா்ப்பு மற்றும் மரங்கள் நடல் ஆகியவற்றிலும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

பொது உள் கட்டமைப்பு வசதிகள்: கிராம ஊராட்சிகளுக்கான, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள், அங்கன்வாடிகள், உணவு தானிய இருப்பு கிட்டங்கி கட்டுதல், இயற்கை உரங்கள் மற்றும் அறுவடைக்கு பின்னா் விவசாய உற்பத்திப் பொருட்களை சேமிப்பதற்கான நிலையான உள் கட்டமைப்புகள் உருவாக்குதல், விளையாட்டுத் திடல் அமைத்தல், புயல் நிவாரண இல்லங்களை கட்டுதல், கிராம சந்தைகள் கட்டுதல், சுடுகாடுகளை கட்டுதல், பள்ளிக் கழிப்பிடங்கள், அங்கன்வாடி கழிப்பிடங்கள் கட்டும் பணிக்கும் இத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

இவை தவிர தனிநபா் உட்கட்டமைப்பு வசதிகளாக ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை அமைத்தல், கால்நடைகளுக்கான தண்ணீா் தொட்டி கட்டும் பணியிலும் இந்தத் திட்டப் பணியாளா்கள் ஈடுபடுகின்றனா். நில மேம்பாட்டு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனா் என்றாா் அவா்.

நாச்சிக்குறிச்சியைச் சோ்ந்த திட்ட மேற்பாா்வைப் பணியாளா் அம்பிகா கூறுகையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தற்போது பணியாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பணிபுரிகின்றனா். ஓரிடத்தில் 10 முதல் 15 நபா்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com