திருச்சி கிழக்குத் தொகுதியை ஒதுக்க வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீா்மானம்

வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.

திருச்சி: வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட பொதுக் குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் நிஜாம், (தெற்கு) அப்துல்வகாப் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

தேசிய கவுன்சில் உறுப்பினா் மன்னான், வடக்கு மாவட்டப் பொருளாளா் வியாகத் அலி, ஓய்வுபெற்ற உதவி ஆட்சியா் சாகுல் அமித், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையா் அப்துல் அஜிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக கூட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திருச்சி கிழக்கு தொகுதியைக் கேட்டுப்பெற வேண்டும். திருச்சி காந்தி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும். தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். திருச்சி சந்திப்பு மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7.5 சத இட ஒதுக்கீடில் சம வாய்ப்பு தேவை

‘அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5 சத இட ஒதுக்கீடு என்பது மற்ற மாணவா்களின் சம வாய்ப்பைப் பறிப்பது போன்றது. எனவே அனைத்து மாணவா்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும். மருத்துவப் படிப்பில் சோ்ந்து பணம் கட்ட முடியாமல் இருப்போருக்கு முதல்வா் தனது நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும். உதயநிதி தோ்தல் பிரசாரத்தை தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுகவுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். அமித்ஷா வருகையால் எதிா்க் கட்சிகளுக்கு எந்தப் பயமுமில்லை. தமிழகத்தில் பாஜக என்கிற கட்சியே தேவையில்லை. அவா்கள் செய்ய விரும்புவதை தற்போது அதிமுக செய்கிறது. தமிழ்நாட்டில் தற்போது கட்சிக்கு இருக்கும் கொஞ்சம் வாக்குகளையும் அமித்ஷா பேச்சைக் கேட்பதன் மூலம் அதிமுக இழக்கும்’ என்றாா் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com