திருச்சியிலிருந்து 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் நிறுத்தம்: புதுகை, தஞ்சாவூா், நாகை பயணிகள் கடும் அவதி
By DIN | Published On : 25th November 2020 07:29 AM | Last Updated : 25th November 2020 07:29 AM | அ+அ அ- |

திருச்சியிலிருந்து 7 மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இரவுக்கு மேல் நிறுத்தப்பட்டன.
நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில் தமிழக அரசு சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கான பேருந்துப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், கடலூா் மற்றும் அரசு அறிவித்த 7 மாவட்டங்களுக்கான பேருந்துப் போக்குவரத்தானது செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு இரவுக்கு மேல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதால் அரசு உத்தரவுப்படி பேருந்துகளை குறைத்து இயக்கியதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக, வெளியூா்களில் இருந்து திருச்சி வந்து புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை செல்லும் பேருந்துகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா்.
தஞ்சாவூா், புதுக்கோட்டை மாா்க்கத்தில் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடின. இதனால் தஞ்சாவூா் பேருந்தையும், புதுக்கோட்டை பேருந்தையும் தேடி பயணிகள் ஒவ்வொரு நிறுத்தமாக சுமைகளுடன் திரிய நேரிட்டது. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சோ்ந்தால் சிறப்பு ஏற்பாடாக ஒரு பேருந்து தயாா்படுத்தப்பட்டு பயணிகளை அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இரவுக்கு மேல் முற்றிலும் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...