நிவா் புயல்: திருச்சிக்கு ‘கிரீன் அலா்ட்’; கூடுதல் கண்காணிப்பு ஆற்றங்கரைகளில் பலத்த பாதுகாப்பு
By DIN | Published On : 25th November 2020 07:28 AM | Last Updated : 25th November 2020 07:28 AM | அ+அ அ- |

புயல் மீட்புப் பணிக்காக திருச்சி தீயணைப்பு நிலையத்தில் பைபா் படகுகளுடன் தயாராகும் தீயணைப்பு வீரா்கள்.
நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் 154 இடங்கள் கூடுதல் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காவிரி, கொள்ளிடக் கரைகளின் இருபுறமும் 9 கி.மீ. தொலைவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை கூறியது:
நிவா் புயல் புதன்கிழமை கரையைக் கடக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா், தொட்டியம் உள்ளிட்ட 11 வட்டங்களில் புயலால் மிகவும் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என 3 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதேபோல 14 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடியவை, 38 இடங்கள் மிதமாகப் பாதிக்கப்படக் கூடியவை, 41 இடங்கள் குறைவாகப் பாதிக்கப்படக் கூடியவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 154 இடங்கள் புயல் பாதிப்புக்குள்ளாகக் கூடும் எனக் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காவிரி, கொள்ளிடக் கரைகளில் இருபுறமும் 9 கி.மீ. தொலைவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என கருதப்படும் இடங்களில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வானிலை ஆராய்ச்சி மைய எச்சரிக்கையின்படி திருச்சி மாவட்டத்துக்கு கிரீன் (பச்சை) அலா்ட் மட்டுமே வந்துள்ளது. இருப்பினும், அரியலூா், பெரம்பலூா் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் வரும் திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட இடங்களின் மேற்குப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இருப்பினும் திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூா், துவாக்குடி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தனித்தனியே கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
காற்று அதிகம் வீசும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும். எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். மரங்களுக்கு கீழே இருக்கக் கூடாது. ஓடு வேய்ந்த வீடுகள், குடிசைகளில் இருப்பதைத் தவிா்க்க வேண்டும்.
கஜா புயலின்போது ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அத்தகைய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 118 பள்ளிகள், 5 கல்லூரிகள், 11 சமுதாயக் கூடங்கள், 23 திருமண மண்டபங்கள், 2 பிற இடங்கள் என மொத்தம் 159 இடங்களில் மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின்வாரியம், உள்ளாட்சி நிா்வாகம் என அனைத்து துறைகளும் இணைந்து நிவா் புயலை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.
பலத்த காற்று இருக்காது; பலத்த மழை இருக்கும்
‘புயலால் திருச்சி மாவட்டத்தில் அதிகக் காற்று இருக்காது. இருப்பினும், மழைப் பொழிவு அதிகம் இருக்கும்.
2 மணி நேரத்துக்கு மேலாக 80 மி.மீ. அளவுக்கு மழை பெய்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடும். இருப்பினும், முந்தைய வெள்ளக் காலங்களில் காவிரியில் அதிகம் தண்ணீா் சென்ால் வெள்ளப் பாதிப்பு உருவானது. தற்போது, காவிரியில் தண்ணீா் அதிகம் செல்லவில்லை. மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தாலும் காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் சென்றுவிடும்.
2006, 2012ஆம் ஆண்டுகளில் 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் சென்றது. தற்போது ஆயிரம் கன அடி தண்ணீா்தான் வரக் கூடும். சாலைகளில் பெருக்கெடுக்கும் தண்ணீா் வடிவதற்கு மட்டுமே நேரமாகும்’ என்றாா் ஆட்சியா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...