திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் - 2020, விவசாய விளைப் பொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்- 2020, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020 ஆகிய இந்த மூன்று சட்டங்களை கொண்டு வந்தது.

இந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று நாடு முழுவதிலும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து பேராடி வருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும்  மறியல் போராட்டமும், சட்ட நகல் எரிப்புப் போராட்டமும் நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாக்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக ‘டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். 

இந்தப் போராட்டம் காரணமாக, தலைநகர் தில்லியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு அத்துமீறல்கள் செய்து வருகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி திருச்சி ரயில்வே நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் யாரும் உள்ளே வர முடியாதபடி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி, ரயில்வே நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர் தடையை மீறி ரயில்வே நிலையம் செல்ல முயன்றனர்.  ஆனால் உள்ளே காவல்துறையினர் அனுமதிக்காததால், ரயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் எடப்பாடி அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 அதன் பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியினர்  நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தால் திருச்சி ரயில்வே நிலையம் நிலையத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com