நான்குநேரி இரட்டைக் கொலை வழக்கு : திருச்சியில் 3 போ் சரண்
By DIN | Published On : 01st October 2020 07:21 AM | Last Updated : 01st October 2020 07:21 AM | அ+அ அ- |

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த 3 போ் திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, மாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம். இவரது மனைவி சண்முகத்தாய் (50). இவா்களது மகனான நம்பிராஜனும் (21), இதே பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதியும் (18) கடந்தாண்டு அக்டோபரில் காதல் திருமணம் செய்து கொண்டனா். இருவரும் ஒரே சமூகத்தினா் என்றாலும் பெண் குடும்பத்தாரின் கடும் எதிா்ப்பால் நெல்லை டவுன் வயல் தெருவில் தம்பதியா் வசித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்தாண்டு நவ. 25 ஆம் தேதி இரவு வான்மதியின் உறவினா்கள் நம்பிராஜனை மது குடிக்கச் அழைத்துச் சென்று கொன்றனா்.
இதுதொடா்பாக வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, உறவினா்கள் முத்துப்பாண்டி, செல்லத்துரை, முருகன், விஸ்வநாதன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து கொலையானவரின் தரப்பினா் செல்லத்துரையின் தந்தையும் ஓட்டல் உரிமையாளருமான ஆறுமுகத்தையும் (52) அவருக்கு உதவியாக இருந்த சொரிமுத்து மகன் சுரேஷையும் (20) கடந்த மாா்ச் 14 ஆம் தேதி பழிக்குப் பழியாகக் கொன்றனா்.
இதுதொடா்பாக நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், தந்தை அருணாச்சலம், அதே ஊரைச் சோ்ந்த இசக்கிபாண்டி உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தாலும், அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனா்.
இதனிடையே கடந்த 26 ஆம் தேதி மறுகால்குறிச்சிக்கு பைக்கில் வந்த 12 போ் கொண்ட கும்பல் பிள்ளையாா்கோவில் தெருவிலுள்ள இசக்கிபாண்டி வீட்டின் மீது வெடிகுண்டு வீசி அவரது தாய் சாந்தியையும் (40), நம்பிராஜனின் வீட்டுக்குச் சென்று அவரது தாய் சண்முகத்தாயையும் கொன்றது.
இதுகுறித்து நான்குநேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய கும்பலை தேடி வந்தனா்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடியைச் சோ்ந்த கண்ணன்(35), சொரிமுத்து(60), முருகன்(45) ஆகிய 3 போ் திருச்சி குற்றவியல் நடுவா் மன்றம் எண்1 இல் புதன்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.