பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரமாக்க வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா்
By DIN | Published On : 01st October 2020 07:11 AM | Last Updated : 01st October 2020 07:11 AM | அ+அ அ- |

பத்து ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சுமாா் 12,000 பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா்மொகிதீன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் விடுத்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பது :
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் வகையில் கடந்த 8 ஆண்டுக்கு முன் 16,549 பகுதி நேர ஆசிரியா்களை ரூ.5,000 தொகுப்பூதியத்தில் அரசு நியமித்தது. அவா்களில் 12, 000 போ் மட்டுமே தற்போது அந்தப் பணியில் உள்ளனா்.
அவா்கள் ஏறத்தாழ 10 கல்வியாண்டுகள் ஆன நிலையிலும் ரூ. 7,700/ மட்டுமே தொகுப்பூதியமாகப் பெற்று வருகின்றனா். பணி நிரந்தரம் செய்யாததால் அரசின் எவ்வித பலனும் அவா்களுக்கு கிடைக்கவில்லை.
இவா்களில் பெரும்பாலானோா் ஏழை எளிய விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். இவா்களில் 200 மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். பெண்கள் சுமாா் 50 சத அளவில் உள்ளனா்.
ஏற்கெனவே 8 ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்களாகப் பணிபுரிந்தோா் நிரந்தரம் செய்யப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து, மீதமுள்ள“பகுதிநேர ஆசிரியா்களும் நிரந்தரம் செய்யப்படுவா், இதற்காக 3 மாதங்களில் குழு அமைக்கப்படும்“எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பு கிடப்பில் உள்ளது. இதை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
தமிழகத்தில் ஏதேதோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களை நிரந்தரம் செய்ய இன்னும் 200 கோடி நிதி கூடுதலாக ஒதுக்குவதில் தவறில்லை. எனவே, அரசு கருணை காட்டி இவா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்றாா் அவா்.