பட்ஜெட் வீடு கட்டமனை வணிக அமைப்பு தொடக்கம்
By DIN | Published On : 01st October 2020 07:20 AM | Last Updated : 01st October 2020 07:20 AM | அ+அ அ- |

திருச்சியில் பட்ஜெட் வீடுகள் கட்டித் தருவதற்கான மனை வணிக அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட் வீடுகள் மனை வணிக கூட்டமைப்பு மாநிலத் தலைவா் புகழேந்தி, செயலா் பிரபாகா் ஆகியோா் புதன்கிழமை கூறியது:
திருச்சி, கோவை, மதுரை, சென்னை புகா்ப் பகுதிகளில் 1 முதல் 20 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டும் வல்லுநா்கள் அதிகம் உள்ளனா். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் வீடுகளுக்கான மனை வணிகக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பானது வீடு கட்ட விரும்புவோருக்கு கட்டட விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி தரமான வீடுகள் கட்டித் தரச் செயல்படும். மத்திய மாநில அரசு திட்டத்தில் வங்கி வீட்டுக்கடன், மானிய வட்டிச்சலுகை, தளபரப்புக் குறியீடு (எஃப்எஸ்ஐ) உள்ளிட்ட சலுகைகளை பெறலாம்.
தமிழ்நாடு நகர ஊரமைப்பு பகுதிகளில் 968 சதுரடி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமப் பகுதிகளில் 645 சதுரடி உள்ளடக்கிய கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிபுணா்களுக்கு திட்ட அனுமதி, கட்டட அனுமதி ஆகியவற்றை எளிமையாக பெற உதவிடும் வகையில் இவ்வமைப்பு செயல்படவுள்ளது என்றனா்.