பட்டியலினக் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல்: இரா. முத்தரசன் பேட்டி
By DIN | Published On : 02nd October 2020 11:55 PM | Last Updated : 02nd October 2020 11:55 PM | அ+அ அ- |

காந்தி அஸ்தி மண்டபத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் உள்ளிட்டோா்.
திருச்சி, அக். 2: நாடு முழுவதும் பட்டியலினக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகேயுள்ள அவரது அஸ்தி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்திய அவா் மேலும் கூறியது:
உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தியை தாக்கியதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பதை அறிந்த தமிழக அரசு வேண்டுமென்றே கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் நிலையில், பிரதமா் இப்போராட்டங்களைத் தவறாகச் சித்தரிக்கிறாா். புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து வரும் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் கட்சி சாா்பில் மறியல் நடத்தப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து உடல் நலக்குறைவால் கடந்த செப்.17 இல் உயிரிழந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வேங்கூா் மா. சுப்ரமணியன் படத்திறப்பு விழாவில் பங்கேற்று முத்தரசன் பேசினாா்.
நிகழ்வில் திருவெறும்பூா் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.என். சேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன், மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.