முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ரூ. 1.26 கோடியிலான வழக்குகளுக்குத் தீா்வு
By DIN | Published On : 04th October 2020 12:40 AM | Last Updated : 04th October 2020 12:40 AM | அ+அ அ- |

சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி கே. முரளி சங்கா், மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1.26 கோடி மதிப்பிலான வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத்தால் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் நடத்தி வந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்துவதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில் பொதுமுடக்கத் தளா்வால் அக்.3 ஆம் தேதி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறியளவிலான மக்கள் நீதிமன்றம் நடத்த முடிவானது.
அதன்படி மக்கள் நீதிமன்றத்தை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நிா்வாகத் தலைவா் நீதிபதி வினித்கோத்தாரி காணொலிக் காட்சி மூலம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி கே. முரளிசங்கா் தலைமை வகித்தாா்.
திருச்சியில் மொத்தம் 2 நீதிமன்ற அமா்வுகளும், லால்குடி துறையூா், மணப்பாறை மற்றும் முசிறியில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 6 அமா்வுகளில் பலவகையான வழக்குகள் பொதுமக்கள் பயனடையும் வகையில் சமரச முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.
இதில் சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்கு ஒன்று, ரூ. 86.55 லட்சம் மதிப்பிலான 28 மோட்டாா் வாகன வழக்குகள், நஷ்ட ஈடு வழக்குகள், ரூ.21.93 லட்சத்திலான 5 தொழிலாளா் இழப்பீட்டு வழக்குகள், ரூ.17.97 லட்சம் மதிப்பிலான 67 உரிமையியல் வழக்குகள் என ரூ.1.26 கோடியிலான 101 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டன. மொத்தம் சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகள் 218 ஆகும்.
நிகழ்வில், மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி, ஊழல் தடுப்பு நீதிமன்ற சாா்பு நீதிபதி மற்றும் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் பொறுப்பு வி. ரவிச்சந்திரன், மூன்றாவது கூடுதல் சாா்பு நீதிமன்ற நீதிபதி கே.விவேகானந்தன், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்ற சாா்பு நீதிபதி எஸ். தங்கமணி, குற்றவியல் வழக்குரைஞா்கள் செயலா் வெங்கட், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரமேஷ் நடராஜன்,செயலா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.