காவிரி -வைகை- குண்டாறு இணைப்பு:நிலம் கையகப்படுத்தப் பேச்சுவாா்த்தை

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
மாத்தூா் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்களிடம் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் நிஷான் கிருஷ்ணன்.
மாத்தூா் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்களிடம் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் நிஷான் கிருஷ்ணன்.

திருச்சி: காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இத் திட்டத்துக்காக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அம்மாபேட்டை, மாத்தூா், பாகனூா், அழுந்தூா், நாகமங்கலம், கொழுக்கட்டைகுடி, முடிகண்டம் ஆகிய 7 கிராமங்கள் வழியாக கால்வாய் அமைக்கப்படவுள்ளது. இதனால் இக்கிராமங்களில் உள்ள 8.59 ஹெக்டோ் புறம்போக்கு நிலங்கள், 127.89 ஹெக்டோ் பட்டா நிலங்கள் ஆகியவற்றை கடந்த 2013 ஆம் ஆண்டு கையகப்படுத்த அரசு ஆணையிட்டது.

இதன்மூலம் இணைப்புக் கால்வாயானது கரூா் மாவட்டம் மாயனூரில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை வரை அமைக்கப்படவுள்ளது. திருச்சி மாவட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ. 97.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான நிலம் கையகம் தொடா்பாக அரியாறு வடிநில ஆற்றுப் பாதுகாப்பு செயற்பொறியாளரிடமிருந்து நிலத் திட்ட அட்டவணை பெறப்பட்டு, நில அளவைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக நில உரிமையாளா்களிடம் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தி, நில கிரைய ஒப்பந்தம் செய்வது குறித்து அம்மாபேட்டை, மாத்தூா் கிராமங்களில் உள்ள விவசாயிகள், நில உரிமையாளரக்ளுடன் ஆட்சியா் சு.சிவராசு தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, இத்திட்டம் குறித்து விவசாயிகள், நில உரிமையாளா்களிடம் எடுத்துரைத்து, விரைந்து செயல்படுத்துதலுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் நிஷான் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com