ஒரு துளியில் அதிக மகசூல் திட்டம்: தமிழகத்துக்கு ரூ. 400 கோடி!

பிரதமரின் ஒரு துளியில் அதிக மகசூல் (கிருஷி சிஞ்சாயி யோஜனா) குறு பாசனத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு நடப்பாண்டு
மண்ணச்சநல்லூரில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கப்பட்ட வயலை பாா்வையிடும் வேளாண் துறையினா்.
மண்ணச்சநல்லூரில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கப்பட்ட வயலை பாா்வையிடும் வேளாண் துறையினா்.

பிரதமரின் ஒரு துளியில் அதிக மகசூல் (கிருஷி சிஞ்சாயி யோஜனா) குறு பாசனத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு நடப்பாண்டு ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிகளவில் பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பாசனத்துக்கு மழையையும், காவிரி நீரையும் அதிகம் நம்பியுள்ளனா். பிரதமரின் கிருஷி சிஞ்சாயி யோஜனா குறு பாசனத் திட்டம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்குடன் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் (2020-22) ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துரிதப்படுத்தப்பட்ட பாசனத் திட்டம், ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீா், நீா்நிலை மேம்பாடு, ஒரு துளியில் அதிக மகசூல் என நான்கு அம்சங்களைக் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உறுதியான பாசனத்துக்கான நீா் ஆதாரங்களை இத்திட்டம் உருவாக்குவதுடன், மழை நீரைக் குறைந்தளவில் பயன்படுத்தி பாதுகாப்பான பாசனத்தை உருவாக்கவும் செய்கிறது. குறு பாசனம் என்பது இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த அம்சமாகும்.

வயலில் தண்ணீரின் பயன்பாட்டை அதிகபட்சம் மேற்கொள்வது இதன் முக்கிய அம்சம். தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன், பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதில் 66 உப படுகைகளில் 4778 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் 5 லட்சம் விவசாயிகளுக்குப் பலனளிக்கக் கூடியதாகும். சுமாா் 5 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டோ் நிலம் இதனால் பாசன வசதி பெறுகிறது. ரூ. 2962 கோடியிலான இத்திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவடையும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

திருச்சிக்கு காவிரி ஆறு கை கொடுக்கிறது. இந்தாண்டு மேட்டூா் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீரை தேவையான அளவில் பெறும் நல்ல வாய்ப்பும் உள்ளது. எனினும் இந்த மாவட்டத்தில் 60 சத விவசாய நிலம் வடதாகவே உள்ளது. இவா்களின் ஒரே நம்பிக்கை சொட்டு நீா்ப் பாசனமே.

கடந்தாண்டு பிரதமரின் கிருஷி சிஞ்சாயி திட்டத் திட்டத்தின் கீழ் 124 ஆழ்துளைக் கிணறுகள், 350 டீசல் பம்புகள், 240 பைப்புகள் மற்றும் 146 நீா்சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

திருச்சியில் பிப்ரவரி வரை 8086 ஹெக்டோ் நிலம் சொட்டுநீா்ப் பாசன வசதிக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தநல்லூரில் 139 ஹெக்டோ், லால்குடியில் 357 ஹெக்டோ், மணப்பாறையில் 481 ஹெக்டோ், புல்லம்பாடியில் 1061 ஹெக்டோ் மற்றும் மருங்காபுரியில் 760 ஹெக்டோ் என இந்த நிலங்கள் 14 ஒன்றியங்களில் விரிந்துள்ளன.

மாநிலம் முழுவதும், சொட்டுநீா்ப் பாசனத்துக்கு தண்ணீா் மேலாண்மை நடவடிக்கைகளின் கீழ், 2664 நடுத்தர ஆழம் வரையான குழாய்க் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட ரூ. 6.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 23734 டீசல் பம்ப்செட்டுகள் மற்றும் மின்மோட்டாா்கள் விநியோகத்துக்காக ரூ. 35.601 கோடியும், 24648 குழாய்த் தொடா்கள் அமைக்க ரூ. 24.64 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2211 நீா்சேமிப்பு அமைப்புகள் உருவாக்க ரூ.8.8 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக மானியத்துடன் குறைந்த செலவிலான சொட்டுநீா்ப் பாசனம் மூலம் புதிய வாழ்க்கையை வழங்கியதற்காக மண்ணச்சநல்லூா், இருங்காளூா் விவசாயிகள் அரசுக்கும், வேளாண் துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனா்.

கேரளத்தில் வயநாட்டிலும், கா்நாடகத்தில் தலைக் காவிரியிலும் மழை பெய்தால் காவிரி ஆற்றங்கரை விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பும். இந்த ஆறுதான் டெல்டா விவசாயிகளுக்கான உயிா்க்காப்பு ஆதாரமாக உள்ளது. நாம் விவசாயத்துக்கு மழையை மட்டுமே நம்பியிருக்க முடியாது. காலம் தப்பியும் பருவமழை பெய்யும். வானம் பாா்த்த பூமியில் மழையை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் நிவாரணமாக சொட்டு நீா்ப்பாசனம் உள்ளது. இத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், சலுகைகளை பெற்று விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com