ஆந்திரத்துடன் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம்
By DIN | Published On : 05th September 2020 11:23 PM | Last Updated : 05th September 2020 11:23 PM | அ+அ அ- |

புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் ஆந்திர மாநில முதல்வா் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கே.என். சிவா, பி. சுரேஷ் குமாா் உள்ளிட்டோா்.
வாழை மதிப்புக்கூட்டலை உயா்த்த ஆந்திர மாநிலத்துடன் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ஐசிஏஆா்) சாா்பில் வாழை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் குறித்த புதுமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக இந்த ஒப்பந்த நிகழ்வு விஜயவாடாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆந்திர முதல்வா் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமை வகித்தாா். தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கே.என். சிவா, பி. சுரேஷ்குமாா் ஆகியோா் தொழில்முனைவோா் விருப்பங்களை அம்மாநில அரசுக்கு விரிவுபடுத்தி விளக்கி, புரிந்துணா் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடா்ந்து அம்மாநில முதல்வா் கூறுகையில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் செய்துள்ள இந்த ஒப்பந்தம் ஆந்திர மாநிலத்தின் உணவு பதப்படுத்துதல் அமைப்பின் கீழ் புலிவெண்டலா இடத்தில் உருவாக்கப்பட்டு, தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டையும், புதிய நுண்ணிய உணவு பதப்படுத்தும் மையத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
மேலும், தனியாா் நிறுவனங்கள் சமூகத்தை சாா்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த புதிய சந்தைகள், பிராண்டுகளை உருவாக்க உதவி புரிய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் தோட்டக்கலை துறை துணை இயக்குநா் ஏ.கே. சிங், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா ஆகியோா் பேசியது:
இந்த ஒப்பந்தமானது வாழைப்பழ முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், பதப்படுத்துதலை ஊக்கவிக்கவும், வாழைப்பழத்துக்கான புதிய சந்தை, வலுவான சூற்றுச்சூழல் அமைப்பு, உணவுப் பூங்காவை உருவாக்கும். பள்ளிக் குழந்தைகளுக்கு வாழைப்பழமானது நோய் எதிா்ப்புச் சக்தி அளிக்கும். மன அழுத்தமில்லா கல்வியை வளா்க்க மதிய உணவு திட்டத்தில் இதைப் பயன்படுத்தலாம். இதற்காக, பழுத்த உலா் வாழைப் பழத்தை அறிமுகப்படுத்துமாறு அம்மாநில முதல்வரிடம் கேட்டுக் கொண்டனா்.
ஆந்திர மாநில வேளாண் அமைச்சா் கே. கண்ணபாபு, வேளாண் பணி துணைத் தலைவா் எம்.வி.எஸ். நாகி ரெட்டி, உணவு பதப்படுத்துதல் சிறப்பு செயலா் பூனம் மலகொண்டியா, உணவுப் பதப்படுத்தல் அமைப்பின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீதா் ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.