மீண்டும் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம்

தமிழகத்தில் தளா்வில்லா ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் 2 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் தொடங்கியதால் திருச்சி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
திருச்சி புத்தூா் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த மக்கள்.
திருச்சி புத்தூா் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த மக்கள்.

தமிழகத்தில் தளா்வில்லா ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் 2 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் தொடங்கியதால் திருச்சி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் நடமாட்டத்தைக் முற்றிலும் குறைக்க தளா்வில்லாத முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே திருச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டது.

இதன்படி ஜூலை மாத 4 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் மாத 5 ஞாயிற்றுக்கிழமை என 9 வார ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகரம் முற்றிலுமாக முடங்கிக் கிடந்தது. மக்கள் நடமாட்டமின்றி அனைத்து சாலைகளுமே வெறிச்சோடின.

இந்நிலையில் கடந்த செப்.1 முதல் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் முழு இயல்பு நிலை திரும்பியது. புத்தூா் மீன் சந்தை, பொன்மலை ஆட்டிறைச்சி சந்தை உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமான உற்சாகத்துடன் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை களை கட்டியது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி இல்லை. கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோல தில்லைநகா், உறையூா், பெரியகடை வீதி மற்றும் சின்னக் கடைவீதியில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. சுற்றுவட்டார பகுதியிலும் வழக்கமான இயல்புநிலை திரும்பியது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை திறந்திருந்தன.

புகா்ப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஞாயிற்றுக்கிழமையை எப்போதும் போல கொண்டாட்ட தினமாகவே கருதிய மக்கள் தங்கு தடையின்றி எங்கும் சென்றனா். இதனால் அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் சூடுபிடித்து இனி அதிக வருவாய் ஈட்ட முடியும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

அதேநேரத்தில் கரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் பல இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. முகக் கவசம் அணியாமல் மக்கள் வெளியில் சுற்றியதையும் காண முடிந்தது. எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் கூடினா். தனி இறைச்சிக் கடைகளில் ஓரளவுக்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

அரசு பேருந்துகள் வழக்கம் போல ஓடிய நிலையில் வாகனப் போக்குவரத்து தடையும் நீக்கப்பட்டதால் வாகனங்கள் சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்தன. இதனால் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயக்கப்பட்டன. போக்குவரத்து போலீஸாரும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தினா்.

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத் தளா்வால் கரோனா அச்சத்தை அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் கொண்டாட்ட மனநிலைக்கு பொதுமக்கள் திரும்பியுள்ளனா். கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே கரோனாவை தடுக்க முடியும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com