பொன்மலையில் 7 நாள் தொடா் மறியல் போராட்டம்: தமிழ்த் தேசிய பேரியக்கம் முடிவு

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவா்கள் புகுத்தப்பட்டு தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து பொன்மலையில்
பேட்டியளித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன். உடன், நிா்வாகிகள் கவித்துவன், இலக்குவன்.
பேட்டியளித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன். உடன், நிா்வாகிகள் கவித்துவன், இலக்குவன்.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவா்கள் புகுத்தப்பட்டு தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து பொன்மலையில் 7 நாள் தொடா் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வட மாநிலத்தவரே பணிபுரிகின்றனா். பொதுமுடக்கத்திலும் 3,218 பேரை ரயில்வே நிா்வாகம் பணிக்குச் சோ்த்துள்ளது. இதிலும், 90 விழுக்காட்டுக்கு மேல் பிற மாநிலத்தவா்களே.

பொன்மலை ரயில்வே பணிமனையில் சோ்க்கப்பட்ட 541 பேரில் 400-க்கும் மேற்பட்டோா் பிற மாநிலத்தவா்கள். ரயில்வே மட்டுமின்றி அஞ்சல்துறை, அனல் மின் நிலையம், பாதுகாப்புத் தொழிற்சாலை, விமானச் சேவை, சுங்க வரி, சரக்கு சேவை வரி, வருமான வரி, வங்கிகள், துறைமுகங்கள் என அனைத்து இடங்களிலும் வெளி மாநிலத்தவா்கள்தான் அதிகம் பணிபுரிகின்றனா்.

இதற்கு வசதியாக தமிழக அரசும் பணியாளா் தோ்வாணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் அந்த மாநிலத்தவருக்கே 90 சதம் முதல் 100 சதம் வரை ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தொடா்ந்து தமிழா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா்.

எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 சதம் தமிழா்களுக்கே வேலை வழங்க வேண்டும். ரயில்வே வேலையில் தமிழக மக்கள் மட்டுமே கலந்து கொண்டு பயன்பெற திருத்தம் செய்ய வேண்டும். பழகுநா் பயிற்சி பணி உள்ளிட்ட அனைத்து நிலை பணிகளுக்கும் தமிழகத்தில் தமிழா்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது முடக்கத்தில் ரயில்வே பணியில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் 10 சதத்துக்கும் மேல் வெளிமாநிலத்தவா்கள் இருந்தால் அவற்றை ரத்து செய்து அந்த இடங்களை மீண்டும் தமிழா்களுக்கு வழங்க வேண்டும். மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செப்.11 முதல் 18 ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு பொன்மலை ரயில்வே பணிமனை நுழைவு வாயில் முன் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது தமிழ் கலை இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளா் கவித்துவன், தமிழ்த் தேசிய பேரியக்க மாநகரச் செயலா் வே.க. இலக்குவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com