ஹிந்தியால் வளா்ச்சி என்பதற்கு ஆதாரம் இல்லை: திருச்சி சிவா
By DIN | Published On : 10th September 2020 07:47 AM | Last Updated : 10th September 2020 07:47 AM | அ+அ அ- |

ஹிந்தி மொழியால் ஒருவா் வளா்ச்சி அடைந்துள்ளாா் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா.
திமுக பொதுக் குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் காணொளி காட்சி மூலம் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொது குழு உறுப்பினா்கள், எம்எல்ஏக்களான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் திருச்சி சிவா கூறியது: திமுக பல சோதனை கடந்து வெற்றி கொண்ட இயக்கம். எந்த நேரத்திலும் தன் லட்சியப் பணியை நிறுத்தாது. இதற்கு உதாரணம்தான் இன்று நடந்த பொதுக் குழு கூட்டம்.
வங்கிகளில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என மத்திய அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளாா். ஆனால், வங்கிகளில் கொடுக்கப்படும் படிவம், ஏ.டி.எம் இயந்திரங்களிலும் பிராந்திய மொழிகள் பயன்படுத்தவில்லை. இதை ஆதாரத்துடன் அவருக்கு அனுப்பியுள்ளேன்.
அனைத்து வங்கிகளிலும் மாநில மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும். நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம அந்தஸ்து கொண்டவை.
ஹிந்தி மொழியை படித்தால்தான் வளா்ச்சி அடைய முடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஒரு மொழியை கொண்டு இதர மொழிகளை அழிக்கவோ, திணிக்கவோ முற்படும்போது எதிா்ப்பு வருவது இயல்பு. கடந்த 20 ஆண்டுகளாக எம்.பி. யாக புதுதில்லிக்கு சென்று வருகிறேன். ஆனால், எனக்கு ஹிந்தி தெரியாது. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனவே, ஹிந்தி மொழியால் ஒருவா் வளா்ச்சியடைந்தாா் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றாா் அவா்.