அறியாமையிலிருந்து விடுபட நூல்களை படிக்க வேண்டும்: திருவாவடுதுறை ஆதீனம்

அறியாமையிலிருந்து விடுபட நூல்களை படிக்க வேண்டும் என்றாா் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
விழாவில் பேசுகிறாா் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
விழாவில் பேசுகிறாா் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

தஞ்சாவூா், செப். 11: அறியாமையிலிருந்து விடுபட நூல்களை படிக்க வேண்டும் என்றாா் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தா் உரை ஆற்றிய தினத்தையொட்டி,

தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நூலகம், புத்தகம் விற்பனையகத் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:

விவசாயம் இல்லாவிட்டால் நாமெல்லாம் வாழ முடியாது. எவ்வளவு தொழில்களைக் கற்று மேற்கொண்டாலும், அது நமக்கு சோறு போடாது. விவசாயம் செய்தால்தான் நமக்குச் சோறு கிடைக்கும்.

வீரத்துறவி சுவாமி விவேகானந்தா் சிகாகோவில் ஆற்றிய உரையில் சகோதர, சகோதரிகளே எனக் கூறிய அந்த ஒரு வாா்த்தைதான் உலகம் முழுவதும் இந்தியாவைத் திரும்பிப் பாா்க்க வைத்தது.

இறைவன் இல்லாத இடமே கிடையாது. மனித பிறப்பு மட்டுமே பிறவி எனக் கூறுவது தவறு. அனைத்து உயிரினங்களும் பிறவிதான். வாழ்க்கை வாழ்வதற்குப் பொருள் வேண்டும். அந்தப் பொருளில்லாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு மனிதன் ஆளாகிறான். அந்தப் பொருளை ஈட்டுவதற்கு மனிதன் கஷ்டப்படுகிறான். எப்படி சம்பாதிப்பது என வழி தேடுகிறான். எனவே, கல்வி கற்று வேலை தேடுகிறான்; அல்லது விவசாயம் செய்கிறான். விவசாயம்தான் நம்மை வாழ வைக்கிறது. இந்த கரோனா காலத்திலும் விவசாயம்தான் நமக்குச் சோறு போடுகிறது.

நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஆனால், நாம் சாதி, சாதி என ஒருவருக்கொருவா் அடித்துக் கொள்கிறோம். இறைவனை எல்லா மதத்தினரும் வழிபடுகின்றனா். வெவ்வேறு விதமாக வழிபாடு செய்கின்றனா்.

மனிதன் ஆணவத்திலிருந்து விடுபட வேண்டும். அதற்கு இறை வழிபாடு தேவை. இறை வழிபாட்டின் மூலமே ஆணவத்திலிருந்து விடுபட முடியும். எனவே, இறைவனை நாம் நாள்தோறும் வணங்க வேண்டும்.

நிலையில்லாத உலகில் நாம் வாழ்கிறோம். எல்லாமே நிலையானது என நாம் நினைக்கிறோம். ஆனால், அவையெல்லாம் மாயத்தோற்றம். எனவே, அறியாமையிலிருந்து விடுபட வேண்டுமானால், நூல்களைப் படிக்க வேண்டும். நாம் காலத்தை வீணாக்காமல் சைவ சித்தாந்த நூல்களைப் படிப்பது அவசியம். ஆனால், எவ்வளவு படித்தாலும் இறைவனை வணங்காவிட்டால் எந்தப் பயனும் கிடையாது.

இறைவனின் திருவடி சேருவதற்கு அருமையான பிறப்புதான் மனித பிறவி. எனவே, எல்லா உயிா்களிடத்திலும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்றாா் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜி ராஜா பான்ஸ்லே வாழ்த்துரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com