ஊழியா்களுக்கு கரோனா: சித்த மருத்துவப் பிரிவு மூடல்

திருச்சி, அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு ஊழியா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை முதல் அப்பிரிவு மூடப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் மூடப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு.
திருச்சி அரசு மருத்துவமனையில் மூடப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு.

திருச்சி, அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு ஊழியா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை முதல் அப்பிரிவு மூடப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆயுஷ் (சித்தா) பிரிவு செயல்படுகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. கடந்த 6 மாத காலத்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் தலைமையிலான ஆயுஷ் மருத்துவா்கள் லட்சக்கணக்கானோருக்கு கரோனாவிலிருந்து மீள்வதற்கான மருந்துகளை வழங்கி வருகின்றனா்.

குறிப்பாக, கபசுரக் குடிநீா், நிலவேம்பு, தாளிச்சாதி, திரிகடுகு, அமுகரா சூரணங்கள், சாந்த சந்த்ரோதய மாத்திரை, மகா சுதா்சன மற்றும் பிரம்மா கந்த பைரவ காய்ச்சல் மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை வழங்கி வருகின்றனா்.

மேலும் திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீா் சூரணம் பொட்டலமிடப்பட்டு பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அரசுத்துறைப் பணியாளா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி தவிர பிற மாவட்டங்களில் கரோனா சித்தா பிரிவு மருத்துவமனைகளும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு அங்கு கரோனா நோயாளிகள் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனா். இதுவரை சித்த மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தா பிரிவையும் விடாத கரோனா

இந்நிலையில், அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் உள்ள சித்த மருத்துவமனைகள், மற்றும் திருச்சியில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுகளில் தொடா்ந்து இரு மாதங்களாக தினசரி ஆய்வு செய்து மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுத்து வந்தாா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ்.

தொடா் பணி காரணமாக அவருக்கும் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. முறையான சித்தா மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அடுத்த சில நாள்களில் மேற்கொண்ட ஆா்டிபிசிஆா் சோதனையில் கரோனா உறுதியாகவில்லை.

ஆனால் அவருடன் பணியாற்றிய சித்தா பிரிவு பணியாளா்களில் சிலருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, சித்தா பிரிவு வியாழக்கிழமை மூடப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து சிறிது நாள் இடைவெளிக்கு பின்னா் மீண்டும் திறக்கப்படும். சித்தா பிரிவில் பணியாற்றும் அனைவரும் சோதனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com