நலத் திட்ட உதவி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 11th September 2020 06:13 AM | Last Updated : 11th September 2020 06:13 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்த குடும்பத்தினருக்கு முன்னாள் படைவீரா் நலத் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியம், பணிக்கொடை இல்லாமல் வறிய நிலையில் உள்ளவா்களுக்கும், விதவைகளுக்கும் மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும். மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி, முன்னாள் படைவீரா் மற்றும் விதவைகளின் 2 பெண் குழந்தைகளுக்கான நிதியுதவி, வீட்டு வரிச் சலுகை மீளப் பெறுதல், வீடு கட்ட வீட்டுக் கடன் மானியம், ஈமச்சடங்கு மானியம், கண் கண்ணாடி, செயற்கை பற்சட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நலத்திட்ட உதவி அனைத்தும் விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும்.
எனவே, திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்கள், விதவையா் இந்த நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னாள் படைவீரா்கள், வாரிசுகள் தங்களது பதிவுகளை இதுவரை கணினியில் பதிவேற்றாமல் இருந்தால் உடனடியாக பதிவேற்றலாம். மேலும், விவரங்களுக்கு முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, 0431-2960579 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.