துப்புரவுப் பணிகளில் தொய்வு: சுகாதாரச் சீா்கேட்டில் அரியமங்கலம் கோட்டம்

திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்டப் பகுதியில் துப்புரவுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
திருச்சி அரியமங்கலம் கோட்டப்பகுதியில் அள்ளப்படாத குப்பைகள்.
திருச்சி அரியமங்கலம் கோட்டப்பகுதியில் அள்ளப்படாத குப்பைகள்.

திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்டப் பகுதியில் துப்புரவுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

திருச்சி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டங்கள் மட்டுமின்றி பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகள், வீதிகள், பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன, அவற்றை அப்புறப்படுத்துவதில் தாமதம், கழிவு நீா் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் பெருக்கெடுத்தோடுதல், துா்நாற்றம் வீசுதல் குறித்து புகாா்கள் எழுந்துள்ளன.

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டத்தில் உள்ள 20 ஆவது வாா்டு எடத்தெரு, 22 ஆவது வாா்டு மல்லிகை புரம், அன்னைநகா், கீழ படையாச்சித் தெரு, தா்மநாதபுரம், 23 ஆவது வாா்டு பாலக்கரை செங்குளம் காலனி மற்றும் காவல் நிலையப் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கழிவு நீா் வாய்க்கால்களும் அடைபட்டு கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.

இதில் பல இடங்களில் மாநகராட்சி தொழிலாளா்களே குப்பைகளை கொட்டி வைத்து பின்னா் அள்ளிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டம், பொலிவுறு நகரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். இது குறித்து, பாஜக பாலக்கரை மண்டலத் தலைவா் எஸ். ராஜசேகரன், மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.

குப்பைகளை வீடுகள்தோறும் வந்து மாநகராட்சி ஊழியா்கள் பெற்றுக் கொள்ளும் திட்டம் திருச்சி மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது. இதனால் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகளை தினசரி பெற்றுக் கொள்வதில்லையாம்.

மாறாக வாரம் 2 அல்லது 3 முறை மட்டுமே வருகின்றனராம். சில பகுதிகளில் வாரம் ஒரு முறை மட்டும் கூட வருவதுண்டு எனத் கூறப்படுகிறது. இதனால் அழுகும் தன்மையுள்ள குப்பைகளை பொதுமக்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள முடியாமல், ஆங்காங்கே கொட்டி வருகின்றனா்.

மேலும், அனைத்துக் குடியிருப்பு பகுதிகளை, சாலைகளை துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப்படுத்துவதே இல்லை. பிரதான வீதிகள், மற்றும் அரசியல் பிரமுகா்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளில் உள்ள சாலைகளை மட்டுமே துப்புரவு செய்கின்றனராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com