முகக் கவசம் அணியாதோரிடம் அபராத வசூல் தீவிரம்

திருச்சியில் முகக் கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக்கியுள்ளனா்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முகக்கவசம் இன்றி வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலா்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முகக்கவசம் இன்றி வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலா்.


திருச்சி: திருச்சியில் முகக் கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக்கியுள்ளனா்.

திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் உள்ளோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை ஜூன் 4-இல் மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது.

இதற்காக மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் சுகாதார அலுவலா்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இதன்படி முகக்கவசம் அணியாதவா்களிடம் இருந்து ஜூன் 4 முதல் செப்.12 வரை கோட்டம் வாரியாக ஸ்ரீரங்கத்தில் ரூ. 85,818, அரியமங்கலத்தில் ரூ. 3,21,337, பொன்மலையில் ரூ.1,10,970, கோ-அபிஷேகபுரத்தில் ரூ.5,13,646 என மொத்தம் ரூ.10,31,771 அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதைப்போல இதே காலத்தில் , சமூக இடைவெளியைப் பின்பற்றாதோரிடம் இருந்து ஸ்ரீரங்கத்தில் ரூ. 2,300, அரியமங்கலத்தில் ரூ. 27,000, பொன்மலையில் ரூ. 8,700, கோ-அபிஷேகபுரத்தில் ரூ.1,27,507 என மொத்தம் ரூ. 1,65,507 அபராதம் வசூலிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் ரூ. 11,97,278 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தை தீவிரமாக்க தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு போலீஸாா் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனா்.

ஏற்கெனவே இத்திட்டம் நடைமுறையிலிருந்தாலும் செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

அதன்படி முகக் கவசம் அணியாதோருக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500, வணிக நிறுவனங்கள், கடைகளில் விதிகளை மீறும் பட்சத்தில் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com