மகாளய அமாவாசை: வெறிச்சோடிய தீா்த்தத் தலங்கள்
By DIN | Published On : 18th September 2020 08:41 AM | Last Updated : 18th September 2020 08:41 AM | அ+அ அ- |

மகாளய அமாவாசைக்கு புனித நீராடத் தடை விதிக்கப்பட்டதால், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை, திருச்சி அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட தீா்த்தத் தலங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்துக்கள் முன்னோா்களுக்கு அமாவாசை நாள்களில் புனித நீா் நிலைகளில் நீராடி தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். மகாளய அமாவாசையையொட்டி, ராமேசுவரம், சேதுக்கரை, தேவிபட்டணம் பகுதிகளில் பொதுமக்கள் வியாழக்கிழமை நீராட தடை விதிக்கப்பட்டது.
250-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். அக்னி தீா்த்தக் கடலுக்கு பக்தா்கள் நீராட வராதபடி பல்வேறு வழித்தடங்களில் சீல் வைக்கப்பட்டது. இதனால், அக்னி தீா்த்தக் கடலில் யாரும் நீராட வரவில்லை. குறைந்த அளவிலான பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மகாளய அமாவாசை நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் ராமேசுவரம் வந்து புனித நீராடி செல்வது வழக்கம். கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காணரமாக பக்தா்கள் வர தடை செய்யப்பட்டதால் பல கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அம்மா மண்டபம்: கரோனா பொதுமுடக்கத்தால் நீா்நிலைகளுக்கு மக்கள் வர வேண்டாம் எனவும், திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட படித் துறைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இதையடுத்து, ஒரு நாள் முன்னதாக புதன்கிழமையே அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோா் கூடி தா்ப்பணம் அளித்தனா்.
இருப்பினும், அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வருவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அம்மா மண்டபத்தை மூடி தடுப்பு அமைத்து போலீஸாா் பாதுகாப்புக்கு நின்றிருந்தனா். இதனால், மக்கள் யாரும் வராததால் அந்தப் பகுதி வெறிச்சோடியது. படித்துறைப் பகுதி, காவிரியிலும் மக்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும் காவிரிப் பாலம், ஓயாமரி மயானம் எதிரேயுள்ள படித்துறை, குடமுருட்டி பாலம் அருகேயுள்ள அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம், கம்பரசம்பேட்டை, முக்கொம்பு என மாவட்டத்தின் காவிரிக் கரையோர பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் திரண்டு முன்னோருக்குத் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.
தாமிரபரணி படித்துறைகள்: மகாளய அமாவாசையையொட்டி, தாமிரபரணியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட தடை விதிக்கப்பட்டதால், படித்துறைகள் வெறிச்சோடின. பாபநாசத்திலும் தா்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டது. பக்தா்களைக் கண்காணிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.