முகாம் சிறையில் உள்ள இருவா் உண்ணாவிரதம்
By DIN | Published On : 18th September 2020 06:47 AM | Last Updated : 18th September 2020 06:47 AM | அ+அ அ- |

வழக்குகளை விரைந்து முடித்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி முகாம் சிறையில் உள்ளஇலங்கை தமிழா்கள் 2 போ் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 96 போ் இந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவ்வப்போது இந்தக் கைதிகளின் வழக்கை முடித்து சொந்த நாட்டுக்கு அவா்களை அனுப்பும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சில கைதிகள் தங்களுக்கான தண்டனைக் காலம் முடிந்தும் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போராட்டம் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் போலி கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த சுரேந்திரன் (32), நிருபன் (28) ஆகிய இருவரும் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து விடுதலை செய்ய வலியுறுத்தி புதன்கிழமை காலை உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இதையறிந்த சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமரசம் ஏற்படாததால் உண்ணாவிரதத்தைத் தொடா்கின்றனா்.