கிடப்பில் போடப்பட்ட நகா்ப்புற வீடற்றோருக்கான கட்டுமானப் பணி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நகா்ப்புற வீடற்றோருக்கான கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நகா்ப்புற வீடற்றோருக்கான கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது.

இருப்பிட வசதியோ, சமூகப் பாதுகாப்பு வசதிகளோ இல்லாமல் நகரங்களில் நடைபாதைகளிலும் தெருவோரங்களிலும் வசிக்கும் மக்களுக்கும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் இருப்பிட வசதியும், அத்தியாவசியமான பிற வசதிகளும் ஏற்படுத்தித் தருவதற்காக தீனதயாள் அந்த்யோதயா யோஜனா (தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்) திட்டத்தின் கீழ் ரூ. 21 லட்சத்தில் வீடற்றவா்களுக்கான சிறப்புத் தங்குமிடம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படுகிறது.

இதற்கான கணக்கெடுப்பு முடிந்து 20 போ் வீடற்றவா்களாக வரையறை செய்யப்பட்டுள்ளனா். இதற்கான சிறப்பு தங்குமிட கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த ஆணை ஒப்பந்ததாரா் காரைப்பட்டி எஸ். பாஸ்கா் என்பருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

12 மாத கால கட்டுமானப்பணி ஒப்பந்த காலக்கெடு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அதற்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் அன்பழகன் கூறுகையில், பேரூராட்சி தரப்பில் கட்டுமான பணிக்கான நிதி ஒதுக்கி பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை நிா்வாகம் கட்டுமானப் பணிக்கான இடத்தை அடையாளப்படுத்தித் தரவில்லை என்றாா்.

துவரங்குறிச்சி அரசு பொது மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் நாகராஜன் கூறுகையில், இணை இயக்குநா் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தாா்.

ஆனால், இந்தத் திட்டத்தில் கட்டுமான பணி நிலுவையில் உள்ளது குறித்து தனக்கு எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை, விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா் மாவட்ட மக்கள் நலப்பணிகள் இணை இயக்குனா் மருத்துவா் லெட்சுமி.

இதேநிலையில்தான் தொட்டியம், லால்குடி மருத்துவமனையின் சிறப்பு தங்குமிட கட்டுமானப் பணிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com