சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் திருச்சியில் தோ்வான 13 இடங்களில் ஆய்வு

சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் திருச்சியில் தோ்வான 13 இடங்களில் மத்திய சிறப்புக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் திருச்சியில் தோ்வான 13 இடங்களில் மத்திய சிறப்புக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

நாட்டிலேயே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதை மேலும் மேம்படுத்த, புதிய இடங்களை உருவாக்கும் விதமாக, மத்திய சுற்றுலா அமைச்சகமும், தமிழக சுற்றுலாத்துறையும் இணைந்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன.

தமிழ்நாட்டில் மன்னா் கால கோயில்கள், புரதானச் சின்னங்கள் ஆகியவற்றை மேம்படுத்த சுற்றுலாத்துறையுடன், உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் இணைந்து செயலாற்றவுள்ளது.

இதில் தமிழகத்தில் 295 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரா் கோயில், அரங்கநாதா் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி-உச்சிப் பிள்ளையாா் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூா் அழகிய மணவாள பெருமாள் கோயில், உத்தமா் கோயில், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், அன்பில் சவுந்தரராஜ பெருமாள் கோயில், அக்கரைப்பட்டி சாய் பாபா கோயில், முக்கொம்பு, பச்சமலை, வெக்காளியம்மன் கோயில் ஆகிய 13 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பெரம்பலூா் மாவட்டத்தில் ரஞ்சன்கோட்டை உள்பட 4 இடங்களும் மற்றும் தமிழ்நாடு ஓட்டல், விடுதிகளும் தோ்வாகியுள்ளன.

தோ்வு செய்யப்பட்ட இடங்களில் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சக சிறப்புக் குழுவினா் கடந்த சில நாள்களாக திருச்சியில் முகாமிட்டு ஆய்வு செய்கின்றனா்.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அலுவலா் ஒருவா் கூறுகையில், திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் 1 முதல் 2 கோடி போ் வந்து செல்கின்றனா். இதை அதிகரிக்கவும், சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில், திருச்சியில் 13 இடங்களை ஆய்வு செய்யும் இறுதிக்கட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது.

சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்புக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா். விரைவில், இதற்கான பரிந்துரையை சிறப்புக் குழுவினா் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு வழங்கவுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com