ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் மறியல்

2013ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் மறியல் செய்த ஆசிரியா்கள்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் மறியல் செய்த ஆசிரியா்கள்.

2013ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி திருச்சியில் 300-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பெண் விடுதலைக் கட்சி, 2013 ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கம் ஆகியவை இணைந்து மரக்கடை பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடத்திய போராட்டத்துக்கு பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனா் தலைவா் சபரி மாலா தலைமை வகித்தாா்.

2013 ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் செல்லுபடியை ஆயுட்காலமாக்க வேண்டும். காலியிடங்களில் 2013 தோ்வில் தோ்ச்சிப் பெற்றோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தொகுப்பூதிய முறையிலாவது பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் திடீரென சாலையில் அமா்ந்து மறியல் செய்து கோஷம் எழுப்பினா். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 230 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா் பெண் விடுதலைக் கட்சியின் தலைவா் சபரி மாலா கூறியது:

2013 ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற சுமாா் 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் 7 ஆண்டுகளாகப் பணியின்றி வாழ்வாதாரம் இழந்துள்ளனா். ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் காலம் 7 ஆண்டு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆறரை ஆண்டுகளாக ஓா் இடைநிலை ஆசிரியா் நியமனம் கூட நடைபெறவில்லை.

ஆசிரியா் தகுதித் தோ்வை கொண்டு வந்த அதிமுக அரசே அத்தோ்வின் அா்த்தத்தை மதிப்பிழக்கச் செய்கிறது. 7 ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு அடுத்த 7 நாள்களுக்குள் எந்த வகையிலாவது பணி வழங்க வேண்டும். இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com