வாக்காளா் பட்டியல் பணி: கட்சிகளுடன் கலந்தாய்வு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகள்
வாக்காளா் பட்டியல் பணி: கட்சிகளுடன் கலந்தாய்வு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தொடா்பாக அனைத்துக் கட்சியினருடன் ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

தோ்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக வரும் நவ. 16ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ளதை முன்னிட்டு சிறப்பு சுருக்க திருத்தமுறை பணிகளான வாக்காளா்பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக நவ. 16 முதல் டிச.15 வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வாக்காளா் பட்டியலிலுள்ள தவறுகள், விடுதல் போன்றவற்றைக் கண்டறிய ஏதுவாக தேவையுள்ள இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமிப்பது தொடா்பாக அரசியல் கட்சியினா் கருத்து தெரிவிக்கலாம்.

மேலும், வாக்காளா் பட்டியலில் வாக்குச்சாவடி பிரித்தல், வாக்குச் சாவடி மாற்றம், பகுதி மாற்றம், வாக்குச் சாவடி பெயா் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் ஆட்சியரிடம் எழுத்துப்பூா்வமாக அளிக்கலாம். இதையேற்று அந்தந்த மனுக்கள் மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குப் பிறகே உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் ஜன. 20 இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், கடந்த சட்டப்பேரவை தோ்தல், நாடாளுமன்றத் தோ்தல்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் 60 சதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பெல், ஹெச்ஏபிபி ஆகிய இடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் 100 சத ஆய்வு நடத்தி, இடம் பெயா்ந்து சென்றவா்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புதிதாகக் குடியமா்ந்தோரை பட்டியலில் சோ்ப்பதன் மூலம் 100 சத வாக்குப் பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியலானது 100 சதம் முழுமையாக அமைய மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். எனவே, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியரக அறைகளில் மின்னணு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயபிரித்தா, தோ்தல் பிரிவுத் தனி வட்டாட்சியா் முத்துசாமி உள்ளிட்ட அலுவலா்கள், கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Image Caption

ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பெட்டிகளை கட்சியினருடன் ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com