வெடிகுண்டு மூலப்பொருள் பாா்சல் அனுப்பிய இருவா் கைது
By DIN | Published On : 27th September 2020 03:43 AM | Last Updated : 27th September 2020 03:43 AM | அ+அ அ- |

பாா்சலில் வெடிகுண்டு மூலப்பொருள் அனுப்பிய வழக்கில் இருவரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு கண்ணத்தங்குடியைச் சோ்ந்த விவசாயி அறிவழகன் மற்றும் திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதி வீரக்குமாா் ஆகிய இருவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கூரியா் மூலம் வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய பாா்சல் வந்தது.
இதுகுறித்து அம்மாவட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி தில்லை நகா் பகுதியிலிருந்து பாா்சல் அனுப்பப்பட்டது தெரியவந்து, திருச்சி மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்து உதவி கோரப்பட்டது. ஆணையா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
அதில் பாா்சலை அனுப்பியது மன்னாா்குடியைச் சோ்ந்த அமிா்தராஜ், சத்யராஜ் ஆகியோா் என தெரியவந்தது. கரூா் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இருவரும் வெடிகுண்டு பாா்சலை மற்றொரு நபரை வைத்து முன்விரோதத்தால் இருவருக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை செய்கின்றனா். தலைமறைவாக உள்ள மற்றொருவரையும் தேடி வருகின்றனா்.