தீப்பிடித்து எரிந்த காா்: 3 போ் உயிா் தப்பினா்
By DIN | Published On : 29th September 2020 02:04 AM | Last Updated : 29th September 2020 02:04 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருச்சி கொட்டப்பட்டுவைச் சோ்ந்தவா் குழந்தைவேலு(38). தையல் தொழிலாளியான இவா், மனைவி மாலதி (33), மகன் ஸ்ரீவா்ஷன் (11) ஆகியோருடன் காரில் ஈரோட்டுக்குச் சென்று விட்டு, துணிகளை கொள்முதல் செய்து திங்கள்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஜீயபுரம் அருகிலுள்ள பழூா் பகுதியில் காா் வந்த போது என்ஜினில் புகை வெளியேறியது. இதில் காரை நிறுத்தி விட்டு, மூவரும் வெளியேறினா். சிறிது நேரத்தில் காரில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு உருளை பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் காா் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த திருச்சி தீயணைப்பு நிலையத்தினா் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா்.
உரிய நேரத்தில் காரிலிருந்து மூவரும் வெளியேறியதால், அவா்கள் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா்.