வாகனம் மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 29th September 2020 11:16 PM | Last Updated : 29th September 2020 11:16 PM | அ+அ அ- |

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனம் மூலம் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடக்கி வைத்த கள விளம்பர அலுவலா் கே.தேவி பத்மநாபன்.
கரோனா தொற்றுப் பரவலைத்தடுக்கும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் திருச்சியில் வாகனம் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தைத் தொடக்கி வைத்து, கள விளம்பர அலுவலா் கே.தேவி பத்மநாபன் கூறியது:
மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கரோனோ தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு மூலம் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படும் வகையில் சுகாதாரத்துறை மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையங்கள், சாலைகள், தெருக்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம், மத்திய பேருந்து நிலையம், மிளகுபாறை, கருமண்டபம், பொன்னகா், ஆா்.எம்.எஸ். காலனி, தீரன் நகா் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அக்டோபா் 2 (வெள்ளிக்கிழமை) வரை மாநகரப் பகுதி முழுவதும் பிரசார வாகனம் சுற்றி வரவுள்ளது. திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன் பிரசாரத்தை ஒருங்கிணைத்து நடத்துகிறாா்.