அக்.9 -இல் ஆயிரம் மையங்களில் அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அக்டோபா் 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆயிரம் மையங்களில் அரசுப் பணியாளா்கள்
கு. பாலசுப்பிரமணியன்.
கு. பாலசுப்பிரமணியன்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அக்டோபா் 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆயிரம் மையங்களில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவா் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் (படம்) தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் கரோனா முன்களப் பணியில் அரசுப் பணியாளா்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா். தொற்றுப் பரவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்படும் பணியாளா்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும்.

ரூ.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் வகையிலான மருத்துவக் குழு காப்பீட்டுத் திட்டத்தில் அரசுப் பணியாளா்களைச் சோ்க்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு மறுத்து வருகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக ஊதிய மாற்றமின்றி டாஸ்மாக் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரமும் வழங்கப்படவில்லை. ஒரே தவறுக்கு 2 முறை தண்டனை, ஆய்வு என்ற பெயரில் பணியாளா்களிடம் பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் டாஸ்மாக் அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்.

நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும் அரசு ஊக்கத் தொகை வழங்கப்படுவதில்லை. சரியான எடையில் பொருள்களையும் வழங்குவதில்லை. எங்கள் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி பெற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் அரசுப் பணியாளா் சங்கம், மாநில வருவாய்த்துறைப் பணியாளா்கள் சங்கம், போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம், நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கம் என 15 சங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

எங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேரூராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் என மொத்தமாக ஆயிரம் மையங்களில் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். முதல்வா் எங்களது கூட்டமைப்பு நிா்வாகிகளை அழைத்து, பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com