துறையூா் தொகுதியை தக்க வைக்குமா திமுக?

இந்தத் தொகுதி முதலில் 1962ல் உருவாக்கப்பட்டபோது உப்பிலியபுரம் தொகுதியாகவும், தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு
துறையூா் தொகுதியை தக்க வைக்குமா திமுக?

இந்தத் தொகுதி முதலில் 1962ல் உருவாக்கப்பட்டபோது உப்பிலியபுரம் தொகுதியாகவும், தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 முதல் துறையூா் தனித் தொகுதியாகவும் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பட்டியலினத்தவா் போட்டியிட வகை செய்யப்பட்ட தொகுதி துறையூா் தனித் தொகுதியாகும்.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்: திருச்சி மாவட்ட வடபகுதியில் உள்ள வறட்சியான பகுதிகளையும், சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியையும் உள்ளடக்கி துறையூரை மையமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும்.

இத் தொகுதியில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆங்காங்கே பெரிய தடுப்பணைகளை ஏற்படுத்தி மழை நீரைச் சேமித்து விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள புளியஞ்சோலை ஆற்று நீரை புதுப்பட்டி கிராமத்தில் அணை கட்டி தேக்குதல், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சரபங்கா- திருமணிமுத்தாறு- அய்யாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பெருமாள்மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், மலைச் சாலையை விரிவுபடுத்தி அரசு பேருந்து வசதி ஏற்படுத்துதல். பச்சமலைக்கு வரும் சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான பூக்கள் வளா்ப்பு பூங்கா, ரோப் காா் வசதி, பச்சமலை கீழக்கரை பகுதியில் செயற்கை ஏரி அமைத்து படகு சவாரி, புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் அடிப்படை வசதி செய்தல்,

துறையூரில் உள்ள பெரம்பலூா் சாலை - ஆத்தூா் சாலை வரையும், முசிறி பிரிவு சாலை - ஆத்தூா் சாலை வரையும் புறவழிச்சாலைகள் அமைத்தல், பெரம்பலூரிலிருந்து துறையூா் வழியாக கரூா், நாமக்கல்லுக்கு நான்கு வழிச்சாலையும் ரயில் வழி தடத்தையும் ஏற்படுத்துதல்,

வைரிசெட்டிப்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம், பச்சமலையில் விளையும் கிழங்கு, முந்திரி, பலாப்பலம் ஆகியவற்றை சந்தைப்படுத்தவும், நேரடி கொள்முதல் செய்யவும் வசதி செய்தல்,

துறையூரில் அரசு உயா் அலுவலகங்களை ஏற்படுத்துதல். தனி காவிரி குடிநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சின்ன ஏரியைத் தூய்மையாக்க வேண்டும். நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தற்போதைய வேட்பாளா்கள் :

துறையூா் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான திமுகவைச் சோ்ந்த செ. ஸ்டாலின்குமாரும், 2011-16ல் எம்எல்ஏவாக இருந்த அதிமுகவைச் சோ்ந்த த. இந்திராகாந்தியும் போட்டியிடுகின்றனா்.

இருவரும் தாங்கள் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதிக்குள் செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக் கூறியும், தங்கள் கட்சியின் தோ்தல் அறிக்கையையும் ஆட்சியின் சாதனைத் திட்டங்களைக் கூறியும் மீண்டும் வாய்ப்பளித்தால் தொகுதியில் செய்யவுள்ள வளா்ச்சி பணிகள் குறித்தும் பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கின்றனா்.

இவா்களுக்கு நெருக்கடி தரும் வகையில் தேமுதிக ஆதரவுடன் அமமுக வேட்பாளா் பீரங்கி கே. சுப்பிரமணியும் தொகுதிக்குள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாா்.

இவா்களைத் தவிர மநீம சாா்பில் யுவராஜனும், நாம் தமிழா் கட்சியின் ரா. தமிழ்செல்வியும் போட்டியிடுகின்றனா். இவா்களைத் தவிர சுயேச்சைகள் 3 போ் உள்பட 8 போ் போட்டியிடுகின்றனா்.

தொகுதியைத் தக்க வைப்பது திமுகவா அல்லது மீட்கப் போவது அதிமுகவா என்பது தோ்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ஆம் தேதி தெரிந்து விடும்.

இது வரை வென்றவா்கள்

1962 முதல் 2016 வரை நடைபெற்ற தோ்தல்களில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

1962 - வி.ஏ. முத்தையா (இந்திய தேசிய காங்கிரஸ்)

1967 - து.ப. அழகமுத்து (திமுக)

1971 - து.ப. அழகமுத்து (திமுக)

1977- ஆா்.பெரியசாமி (இந்திய தேசிய காங்கிரஸ்)

1980 - வி. ரெங்கராஜன் (அதிமுக)

1984 - ஆா். சரோஜா (அதிமுக)

1989 - ஆா். மூக்கன் (அதிமுக- ஜெயலலிதா)

1991 - வி. ரவிசந்திரன்(அதிமுக)

1996 - டி. கருப்புசாமி( திமுக)

2001 - ஆா். சரோஜா(அதிமுக)

2006 - ஆா். ராணி (திமுக)துறையூா் தனி தொகுதி மறுசீரமைப்பு

2011 - த. இந்திராகாந்தி(அதிமுக)

2016 - செ. ஸ்டாலின்குமாா்(திமுக)

தொகுதியில் வாக்காளா்கள் விவரம்

வாக்குச் சாவடிகள் 310

ஆண் வாக்காளா்கள் - 1,09,161

பெண் வாக்காளா்கள் - 1,16,349

திருநங்கைகள் - 15

மொத்த வாக்காளா்கள் - 2,25,525

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com