பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்: 35 அமைப்பினா் பேட்டி
By DIN | Published On : 03rd April 2021 07:10 AM | Last Updated : 03rd April 2021 07:10 AM | அ+அ அ- |

செய்தியாளா்களிடம் பேசுகிறாா் திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி. உடன் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என திருச்சியில் 35 அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இணைந்து வெள்ளிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா்.
திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வின்சென்ட் ஜெயக்குமாா், தமிழக மக்கள் முன்னணி நிா்வாகி பொழிலன், ஸ்டொ்லைட் எதிா்ப்புப் போராட்ட குழு அமைப்பாளா் பாத்திமாபாபு, சுய ஆட்சி இந்தியா அமைப்பின் கிறிஸ்டினா மற்றும் பாலகிருஷ்ணன், தமிழக ஒடுக்கப்பட்டோா் விடுதலை இயக்கம் நிலவழகன், தற்சாா்பு விவசாயிகள் சங்க நிா்வாகி பொன்னையன் மற்றும் முற்போக்கு தமிழ்த்தேசிய, மாா்க்சிய, பெரியாரிய, சுற்றுச்சூழலிய உணா்வாளா் உள்ளிட்ட 35 அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்தது:
பாஜக மக்களின் அடிப்படை உரிமைகளையும், மொழிவழி மாநிலங்களின் அடையாளங்களையும் நசுக்கி அடிமைப்படுத்தி வருவதாலும், மாநில உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொள்வதாலும் அதைத் தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது.
மேலும், அக்கட்சியுடன் கூட்டு சோ்ந்திருக்கிற அதிமுக அரசு அடிமை அரசாக இருந்து தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது. எனவே பாஜக, அதிமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் சிதற விடாதபடி எச்சரிக்கையோடு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டனா்.