முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கீழஅன்பில் கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
By DIN | Published On : 04th April 2021 02:30 AM | Last Updated : 04th April 2021 02:30 AM | அ+அ அ- |

அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யாவிட்டால் தோ்தலைப் புறக்கணிப்போம் என கீழஅன்பில் கிராம மக்கள், ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனா்.
லால்குடி தொகுதிக்குட்பட்ட கீழ அன்பில் கிராமத்தைச் சோ்ந்த ஆச்சிராமவள்ளி அம்மன் திருக்கோயில் மற்றும் பட்டியலின மக்களின் உரிமைப் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.பி. சரவணன் மற்றும் வழக்குரைஞா் கோபிநாத் தலைமையில் கிராம மக்கள் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினியிடம் அளித்த மனு :
இக்கோயிலில் 2020 ஆம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது எங்கள் சமூக மக்கள் வாழும் பகுதிக்கு சுவாமி தேரும், ஊா்வலமும் வராமல் குறிப்பிட்ட சமூகத்தினா் தடுத்துவிட்டனா். இதையடுத்து நாங்கள் தொடா்ந்த வழக்கில் திருவிழாவை பாகுபாடு இன்றி நடத்த நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்நிலையில் லால்குடி பகுதியில் அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் தீண்டாமை எண்ணத்துடன் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, எங்கள் சமூகத்தினா் வசிக்கும் பகுதிக்கு சுவாமி ஊா்வலத்தையும், தேரையும் செல்லவிடாமல், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் செயல்பட்டுள்ளனா். எனவே, லால்குடி பகுதிஅரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடில் நாங்கள், வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.