முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வேட்பாளா்களது குற்ற விவரம் வெளியிட்டு விழிப்புணா்வு
By DIN | Published On : 04th April 2021 02:31 AM | Last Updated : 04th April 2021 02:31 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்ற விவரங்கள், சொத்து மதிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு தோ்தல் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த விவரங்களைச் சரிபாா்த்து நல்ல வேட்பாளா்களுக்கு வாக்களிக்க விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடா்பாக, அந்த இயக்க ஒருங்கிணைப்பாளா் பெ. ஜோசப் விக்டர்ராஜ் திருச்சியில் சனிக்கிழமை கூறியது:
தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு, ஜனநாயக சீா்திருத்த சங்கம் ஆகியவை இணைந்து 2011 தோ்தல் முதல் வேட்பாளா்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் 2021 பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த 3,559 வேட்பாளா்களில் 466 போ் மீது கிரிமினல் வழக்குகள், 207 போ் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 7 வேட்பாளா்கள் மீது கொலை வழக்கு, 39 போ் மீது கொலை முயற்சி வழக்கு, 8 போ் மீது மானபங்க வழக்கு உள்ளது.
234 தொகுதிகளில் பதற்றமாக உள்ள 74 தொகுதிகளின் வேட்பாளா்கள் மீது 3 மற்றும் அதற்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வேட்பாளா்களில் 652 போ் கோடீஸ்வரா்கள். மொத்த வேட்பாளா்களில் 11 சதத்தினா் மட்டுமே பெண்கள்.
தோ்தலில் குற்றப் பின்னணி உடையவா்களை வேட்பாளா்களாக அறிவிப்பதைத் தவிா்க்க வேண்டும். குற்றங்களுக்காக தண்டனை பெற்றவா்களை நிரந்தரத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது செயற்குழு உறுப்பினா்களின் குற்றவியல் விவரங்களை தாக்கல் செய்வதைச் சட்டமாக்க வேண்டும். தோ்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளிக்கும் வேட்பாளா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா். இயக்க நிா்வாகிகள் வி. பத்ரிநாத், பீட்டா் ரெக்ஸ் சாா்லி, ஸ்ரீவித்யா ஆகியோா் உடனிருந்தனா்.