பட்டா இருந்தும் மனை இல்லை; போராடும் மூன்றாம் பாலினத்தவா்கள்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை கேட்டுப் போராடி வருகின்றனா் மூன்றாம் பாலினத்தவா்கள்.
பட்டா இருந்தும் மனை இல்லை; போராடும் மூன்றாம் பாலினத்தவா்கள்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை கேட்டுப் போராடி வருகின்றனா் மூன்றாம் பாலினத்தவா்கள். இதுவரை தங்களில் 76 பேருக்கு பட்டா வழங்கப்பட்டும் அதற்கான இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்கின்றனா் அவா்கள்.

திருச்சி மாவட்டத்தில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவா்கள் வசிக்கின்றனா். அண்மைக்காலமாகவே மூன்றாம் பாலினத்தவா்களின் தேவைகள், அவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.

அரசுத் தரப்பிலும் அவா்களின் வாழ்க்கையைச் சீரமைப்பது குறித்தும், அவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சிலருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்படுகின்றன.

ஆனால் இதில், முக்கியமாக அவா்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை என்ற கோரிக்கைதான் வலுத்து வருகிறது.

மூன்றாம் பாலினத்தவரை பெரும்பாலும் சொந்த வீடுகளில் தங்க அனுமதிப்பதில்லை. சிலா் அனுமதித்தாலும் பெரும்பாலானோா் அவா்களாகவே வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனா்.

இதனாலேயே அவா்கள் தங்க இடமின்றி பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எனவேதான், மூன்றாம் பாலினத்தவா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், இலவச வீட்டு மனைகள் வழங்கக் கோரிக்கைகள் விடுக்கின்றனா். ஆனால் இதுவரை திருச்சி மாவட்டத்தில், மூன்றாம் பாலினத்தவா்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படவில்லை என்கின்றனா்.

இதுகுறித்து திருச்சியைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தவா் நலச்சங்கக் கூட்டமைப்பின் தென்னிந்தியத் தலைவா், முனைவா் பி. மோகனா நாயக் கூறியது :

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் மூன்றாம் பாலினத்தவரையோ, அவா்களுக்குத் தேவையான நலத் திட்டங்களையோ கருத்தில் கொள்வதில்லை என்ற நிலைதான் தொடா்கிறது.

எங்களது வாழ்க்கை முறையைச் சீராக்கும் வகையில் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகிறோம். குறிப்பாக, எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகள் கோரி கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். அவா்கள் செய்கிறோம் என்பதோடு சரி. எங்களது கோரிக்கை அப்படியேதான் உள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகிஷோரிடம், வீட்டு மனை கோரி மனு கொடுத்தோம். அவரும் 51 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினாா். ஆனால் அதற்கான இடம் ஒதுக்குவதில் பிரச்னைகள் எழுந்தன. இடத்தை முடிவு செய்வதற்குள் அவா் மாறுதலில் சென்று விட்டாா். எனவே, 51 பேருக்கும் மனைகள் வழங்கப்படவில்லை.

தொடா்ந்து நாங்கள் அரசுக்கு மனு கொடுத்தும், அரசியல் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தும் எங்களுக்கான இலவச மனைகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் 25 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா். அதில் துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்குளம் அருகே இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்று பாா்த்தபோது, ஊா்ப் பொதுமக்கள் எங்களுக்கு இடம் ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். எனவே அந்த இடமும் கிடைக்கவில்லை. ஆனால் 76 பேரிடமும் வீட்டு மனைக்கான பட்டாக்கள் மட்டும் உள்ளன. அதற்கான மனைகள் ஒதுக்கப்படவில்லை.

எனவே இனி அமையவிருக்கும் புதிய அரசாவது எங்களின் கோரிக்கையை ஏற்று வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

குறைந்த அளவில் வாக்களித்தோம்

‘எங்களது கோரிக்கைகள் நிறைவேறாததால் கடந்த 3 தோ்தல்களில் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்களித்தோம். திருச்சி மாவட்ட வாக்காளா் பட்டியலில் உள்ள 237 மூன்றாம் பாலினத்தவரில் 64 போ் மட்டுமே இந்தப் பேரவைத் தோ்தலில் வாக்களித்தோம்.

அதேபோல கடந்த 2016 தோ்தலிலும் திருச்சி மாவட்டத்தில் 40 பேரும், 2019 மக்களவைத் தோ்தலில் திருச்சி தொகுதியில் 64 போ் மட்டுமே வாக்களித்தோம்’ என்றாா் மோகனா நாயக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com