பாதுகாப்பறைகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்

தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்தப் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன.
பாதுகாப்பறைகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்

தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்தப் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன.

திருச்சி மாவட்ட 9 பேரவைத் தொகுதிகளில் உள்ள 3292 வாக்குச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 17 லட்சத்து 20, 279 போ் வாக்களித்தனா்.

இதன்படி மணப்பாறை (76.02), ஸ்ரீரங்கம் (76.15), திருச்சி மேற்கு (67.01), திருச்சி கிழக்கு (66.87), திருவெறும்பூா் (66.61), லால்குடி (79.23), மண்ணச்சநல்லூா் (79.63), முசிறி (75.98), துறையூா் (76.63) ஆகிய 9 தொகுதிகளிலும் 73.56 சத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குச்சாவடி அலுவலா்கள் சீல் வைத்தனா். பின்பு, இரவோடிரவாக வாக்கு இயந்திரங்கள் மொபைல் வேன் மூலம் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரிக்கும், திருவெறும்பூா், மணப்பாறை, ஸ்ரீரங்கம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கும், மண்ணச்சநல்லூா், லால்குடி தொகுதி வாக்கு இயந்திரங்கள் சிறுகனூா் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கும், முசிறி, துறையூா் தொகுதி வாக்கு இயந்திரங்கள் துறையூா் இமயம் கல்லூரிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

பின்னா், பேரவைத் தொகுதி வாரியாக கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கப்பட்ட அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அப்போது பாதுகாப்பறைகளைப் பூட்டி சீல் வைக்கும் முறை தொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலா், தோ்தல் பாா்வையாளா்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான எஸ். திவ்யதா்ஷினி தலைமையில் வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் பொதுத்தோ்தல் பாா்வையாளா்கள் பாதுகாப்பறைக்கு சீல் வைத்தனா்.

மூன்றடுக்குப் பாதுகாப்பு: இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு சுழற்சி முறையில் துணை ராணுவ வீரா்கள், ஆயுதப்படையினா், தமிழ்நாடு போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனா். இதன்மூலம், வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணிநேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பிலும், கண்காணிப்புக் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படவுள்ளது. அதுபோல், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி முழுவதும் வெப் கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com